பட்டாசு வழக்கை விரைந்து முடிக்க முறையீடு; சுப்ரீம்கோர்ட்டு நிராகரிப்பு


பட்டாசு வழக்கை விரைந்து முடிக்க முறையீடு; சுப்ரீம்கோர்ட்டு நிராகரிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2019 5:00 AM IST (Updated: 16 Oct 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறு உற்பத்தியாளர்கள் அளித்த முறையீட்டை சுப்ரீம்கோர்ட்டு நிராகரித்து விட்டது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி மேற்கு வங்காளத்தை சேர்ந்த அர்ஜூன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

குறிப்பாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரம் என குறைத்தது. அதேபோல புத்தாண்டு, கிறிஸ்துமஸ் அன்றும் 40 நிமிடம் மட்டுமே பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்தது. அதேபோல பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் திருத்தம் கோரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, மோகன் எஸ்.ஷந்தனுகவுடர், இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் தீபாவளி நெருங்குவதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இதனை நீதிபதி நிராகரித்து விட்டார்.

மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி முன்பு முறையிடுமாறு நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தினார். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி எஸ்.ஏ. போப்டே அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருப்பதால் இங்கு முறையிடுவதாக பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு வருகிற 17-ந் தேதி (அதாவது நாளை) இந்த வழக்கில் வாதங்கள் முடித்துக்கொள்ள இருப்பதால் அதற்கு பிறகு சென்று முறையிடுமாறு நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தினார்.

Next Story