ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் கைது: அனுமானங்கள் அடிப்படையில் ஜாமீன் மறுக்க முடியாது; ப.சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம்


ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் கைது: அனுமானங்கள் அடிப்படையில் ஜாமீன் மறுக்க முடியாது; ப.சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
x
தினத்தந்தி 16 Oct 2019 5:15 AM IST (Updated: 16 Oct 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

அனுமானங்களின் அடிப்படையில் ஒருவருக்கு ஜாமீன் மறுக்க முடியாது என்று ப.சிதம்பரம் தரப்பு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டனர்.

புதுடெல்லி, 

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. பின்னர் அவருடைய காவல் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நாளை (வியாழக்கிழமை) வரை நீட்டித்து உள்ளது.

இதற்கிடையே ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சுரேஷ்குமார் கைத் கடந்த மாதம் 30-ந்தேதி வழங்கிய தீர்ப்பில் அவர் சாட்சியங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்க வாய்ப்பு உண்டு என்பதாலும், சி.பி.ஐ. விசாரணை முன்னேறிய நிலையில் இருப்பதாலும் அவருக்கு ஜாமீன் வழங்க விரும்பவில்லை என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், சி.பி.ஐ. தரப்பில் விசாரணையை ஒத்திவைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனு இன்றே விசாரிக்கப்படும் என்று கூறினர். தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் தன் வாதத்தை தொடங்கினார். டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பின் முக்கியமான பகுதிகளை கோர்ட்டுக்கு வாசித்துக் காட்டிய அவர், தன் வாதத்தில் கூறியதாவது:-

ப.சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்பவரும் சாட்சியங்களை கலைக்கக் கூடியவரும் அல்ல. சாட்சியங்கள் மீது அவர் தன் செல்வாக்கை பயன்படுத்தலாம் என்பதை மறுக்க முடியாது என்ற அடிப்படையில் அவருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் தர மறுத்துள்ளது. இது அனுமானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. அதன்படி ஒருவருக்கு ஜாமீன் வழங்க மறுக்க முடியாது.

ப.சிதம்பரம் சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டு பல நாட்கள் கடந்தும் இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யவில்லை. இதில் இருந்தே அவரை துன்புறுத்தும் நோக்கிலேயே இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது என்று வாதிட்டார்.

தொடர்ந்து மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில் கூறியதாவது:-

இந்த வழக்கின் மற்ற மூன்று சாட்சியங்களான இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி மற்றும் ஆடிட்டர் என்று கூறப்படும் ஒருவர். முகர்ஜி தம்பதியரின் வாக்குமூலம் சீல் வைத்த கவரில் தரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சாட்சியங்கள் கலைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக சி.பி.ஐ. எங்கும் கூறவில்லை. இது போன்ற அனுமானம் முன்பே அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்கள் சாட்சியங்களை பாதுகாக்கும் திட்டத்துடன் நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும். இப்போது இப்படி கூறுவது மிகவும் போலியான வாதமாகும். இது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அவருடைய ஜாமீன் கோரிக்கையை வலுவிழக்க செய்யும் தந்திரமாகும்.

எந்த விதமான பிரமாண பத்திரமும் இல்லாமல் சீல் வைத்த உறையில் தரப்பட்ட வாக்குமூலத்தை, அதுவும் தன்னுடைய மகளையே கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஒருவரின் வாக்குமூலத்தை இந்த கோர்ட்டு எந்த அடிப்படையில் எடுத்துக் கொள்ள முடியும்? இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும் ஜாமீனில் உள்ளார்கள். சிறை என்பது விதிவிலக்கு. கைது என்பது களங்கம் மற்றும் துன்புறுத்தும் நோக்கம் கொண்ட நடவடிக்கையாகும். ப.சிதம்பரம் எங்கும் அடர்ந்த காட்டுப்பகுதியில் கைது செய்யப்படவில்லை. அவருடைய வீட்டில் இருந்துதான் கைது செய்யப்பட்டார். எனவே சி.பி.ஐ. அனுமானங்களின் அடிப்படையில் முன்வைக்கும் எந்தவிதமான குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை என்று வாதிட்டார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணை இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடரும் என்று உத்தரவிட்டனர். இன்று ப.சிதம்பரம் தரப்பில் முன்வைத்த வாதங்களுக்கு எதிராக சி.பி.ஐ. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படும்.

Next Story