சிவாஜி ஆட்சி செய்த நிலத்தில் அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவது அதிர்ச்சி அளிக்கிறது பிரதமர் மோடி


சிவாஜி ஆட்சி செய்த நிலத்தில் அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவது அதிர்ச்சி அளிக்கிறது பிரதமர் மோடி
x
தினத்தந்தி 16 Oct 2019 10:48 AM GMT (Updated: 16 Oct 2019 12:56 PM GMT)

சிவாஜி ஆட்சி செய்த நிலத்தில் அரசியல் லாபங்களுக்காக எதிர்க் கட்சிகள் குரல் எழுப்புவது அதிர்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் மீண்டும் சட்டசபை தேர்தலை கூட்டணியாகவே எதிர்கொள்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்புடன் இரு கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்துடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

இதேபோல் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி, ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, ஓவைசி தலைமையிலான எம்.ஐ.எம். போன்ற சிறிய கட்சிகளும் இந்த தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கின்றன.

இக்கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அகோலா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

காஷ்மீர் சிறப்பு சட்டத்திற்கும், மராட்டியத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என வெட்கமில்லாமல் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. காஷ்மீருக்காக எதையும் தியாகம் செய்யும் மராட்டியத்தின் பெருமைக்குரிய குழந்தைகள் நாங்கள். ஆனால், அரசியல் லாபங்களுக்காக, காஷ்மீர் விவகாரம், மராட்டியத்தில் என்ன செய்யப்போகிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. 

சிவாஜி ஆட்சி செய்த நிலத்தில், இன்று அரசியல் லாபங்களுக்காக குரல் எழுப்பப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் மராட்டியத்தில் பயங்கரவாதம் மற்றும் வெறுப்புவாத சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால் இப்போது குற்றவாளிகள் வெவ்வெறு நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story