அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு


அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2019 8:17 PM IST (Updated: 16 Oct 2019 8:17 PM IST)
t-max-icont-min-icon

பிற நாடுகளில் இருந்து அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகளின் இறக்குமதிக்கும் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் மூலம், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சுமார் 1,21,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

பாகிஸ்தான், வங்காளதேசம், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட 25 நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய  மத்திய அரசு தடை விதித்தது.

பாலியெதிலீன் டெராப்தலேட்(PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையே அதிகமாக இறக்குமாதி செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்வதை விட இறக்குமதி செய்யும் செலவு குறைவாக இருப்பதால் பல நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்து வருகின்றன.

பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, தற்போது சில நிறுவனங்கள் கழிவுகளாக இல்லாமல் துண்டுகளாகவும், கட்டிகளாகவும் பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்து வருகின்றன. எனவே, தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் அனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூரில் பழைய பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் நிலை ஏற்படும் எனவும் இதனால் நாடு முழுவதும் 40 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story