அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்


அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
x
தினத்தந்தி 17 Oct 2019 5:53 AM IST (Updated: 17 Oct 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 40 நாட்களாக நடைபெற்ற அயோத்தி வழக்கு விசாரணை முடிந்தது. பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் அயோத்தி வழக்கு உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

புதுடெல்லி, 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் யோசனையை முன்வைத் தது. அதற்காக, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, சமரச குழுவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அக்குழுவின் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வழக்கை ஆகஸ்டு 6-ந் தேதி முதல், வக்கீல்கள் விவாதம் முடிவடையும் வரை தினசரி அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

தினசரி அடிப்படையில் அதே அமர்வில் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று 40-வது நாளாக நடைபெற்றது.

சமரச குழு, தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், இந்து-முஸ்லிம் இருதரப்பினரும் ஒரு தீர்வுக்கு சம்மதிப்பதாக கூறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும், ஆனால் மசூதிக்கும் இடம்விட வேண்டும் என்றும் தீர்வு ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்றைய விசாரணையில், ராம் லல்லா விக்கிரகம் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், கோவில் தொடர்பான விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டது என்றோ, அந்த இடம் முழுவதுமாக அவர்களிடம் இருப்பது பற்றியோ எதிர்தரப்பினால் இதுவரை எதையும் நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறி தனது வாதத்தை முடித்துக்கொண்டார்.

தொடர்ந்து மூத்த வக்கீல் விகாஸ் சிங், “அயோத்தி மீள்வருகை” என்ற தலைப்பிட்ட ஆங்கில நூலை ஆதாரம் காட்டி தனது வாதத்தை தொடங்கினார். இதற்கு சன்னி வக்பு வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார். இதற்கு விகாஸ் சிங், தான் அந்த நூலை ஆதாரத்துக்கு முன்வைக்கப்போவது இல்லை என்றும், அந்த நூலில் இணைக்கப்பட்டுள்ள ராமர் பிறந்த இடம் தொடர்பான வரைபடத்தையும், சில பக்கங்களையும் கோர்ட்டுக்கு தாக்கல் செய்வதாகவும் கூறினார்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த ராஜீவ் தவான், அந்த பக்கங்களை கோர்ட்டில் கோபத்துடன் கிழிக்கத் தொடங்கினார். அதற்கு தலைமை நீதிபதி இன்னும் துண்டு, துண்டாக கிழிக்கலாமே என்று கோபத்துடன் கூற வக்கீல் ராஜீவ் தவான் மேலும் அந்த பக்கங்களை துண்டு, துண்டாக கிழித்து வீசினார்.

கோர்ட்டில் இப்படி எல்லாம் நடந்துகொண்டால் விசாரணையை நிறுத்தி விட்டு நாங்கள் வெளியேற வேண்டி இருக்கும் என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.

இதுபோன்ற நடவடிக்கை கோர்ட்டின் ஒழுக்கத்தை மீறுவதாக அமைந்துள்ளது. இப்படி எல்லாம் நடந்து கொண்டால் நீதிபதிகள் கோர்ட்டில் வாதங்களை கேட்பதற்கு பதில் வெறும் எழுத்துபூர்வமான வாதங்களை மட்டுமே படித்து முடிவெடுக்கலாமே என்று தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார்.

நிர்மோகி அகாரா தரப்பில் வாதாடிய மூத்த வக்கீல் எஸ்.கே.ஜெயின், பாபர் அயோத்திக்கு வந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. அங்கு பாபர் மசூதியை கட்டினார் என்று முஸ்லிம் அமைப்புகளால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி தன் வாதத்தை முடித்தார்.

இந்து அமைப்புகள் தரப்பில் எதிர்பதில் வாதங்கள் முடிவடைந்து முஸ்லிம்கள் தரப்பில் எதிர்பதில் வாதங்கள் தொடங்கின. ராஜீவ் தவான் வாதத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

இதையடுத்து, அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துபூர்வமான வாதங்களை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக தெரிவித்தனர்.

அடுத்த மாதம் 17-ந் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெற உள்ளார் என்பதும், அதற்குள் இந்த தீர்ப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் நீதிபதிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வெளியாகும் என்ற தகவலால் அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் 30-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

5 நீதிபதிகளும் இன்று தங்கள் அறைகளில் இருப்பார்கள்; வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

அயோத்தி வழக்கு விசாரணை தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெற்று நேற்று முடிவடைந்ததையொட்டி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகிய 5 பேரும் இன்று (வியாழக்கிழமை) தங்கள் அறைகளில் (சேம்பர்) இருப்பார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தான் ஓய்வுபெறும் நவம்பர் 17-ந் தேதிக்கு முன்னதாக தென் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் செய்வதாக இருந்தது. அந்த பயணங்கள் அனைத்தும் சில அவசர பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story