டெல்லி விலங்கியல் பூங்காவில் குடிபோதையில் சிங்க கூண்டுக்குள் குதித்த நபர்


டெல்லி விலங்கியல் பூங்காவில் குடிபோதையில் சிங்க கூண்டுக்குள் குதித்த நபர்
x
தினத்தந்தி 17 Oct 2019 4:22 PM IST (Updated: 17 Oct 2019 4:22 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் விலங்கியல் பூங்காவில் குடிபோதையில் சிங்கம் இருந்த பகுதிக்குள் குதித்த நபரை ஊழியர்கள் உயிருடன் மீட்டனர்.

புதுடெல்லி,

பீகாரின் சம்பரான் மாவட்டத்தில் வசித்து வருபவர் ரேஹன் கான்.  இவர் டெல்லியில் அமைந்துள்ள விலங்கியல் பூங்காவுக்கு  இன்று மதியம் 12.30 மணியளவில் வந்துள்ளார்.  திடீரென சிங்கம் இருந்த பகுதிக்குள் அவர் குதித்து விட்டார்.  அவரை நோக்கி ஆண் சிங்கம் ஒன்று ஓடி வந்துள்ளது.  அதன்முன் தரையில் அமர்ந்தபடி இருந்த கான் பின்பு சாய்வாக படுத்து உள்ளார்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த சிங்கம் பின் அவர் மேல் பாய்ந்துள்ளது.  இதனை அருகே இருந்த பூங்கா ஊழியர்கள் கவனித்துள்ளனர்.  அவர்கள் உடனடியாக செயல்பட்டதனால் சிங்கம் அமைதி அடைந்தது.  இதன்பின்பு அங்கிருந்து அந்த நபரை வெளியே கொண்டு வந்தனர்.

இதில் அந்த நபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.  பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  பூங்கா ஊழியர்கள் கானை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர்.

Next Story