கட்சி பதிவு விவகாரம்: அ.ம.மு.க.விடம் தேர்தல் கமிஷன் விசாரணை
கட்சி பதிவு தொடர்பாக அ.ம.மு.க.விடம் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.
புதுடெல்லி,
டி.டி.வி.தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அ.ம.மு.க.) என்ற அமைப்பை கட்சியாக பதிவு செய்வதற்கு டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு யாராவது ஆட்சேபம் தெரிவிப்பதாக இருந்தால் உடனடியாக தெரிவிக்கலாம் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் டி.டி.வி.தினகரன் கட்சி பெயரில் அம்மா என்கிற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது, கட்சி கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம்பெறக்கூடாது என்பன போன்ற ஆட்சேபங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து இரு தரப்பினரிடமும் நேரில் விசாரணை நடத்துவதற்காக தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து இருந்தது.
அதன் அடிப்படையில் அ.ம.மு.க. துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் நேற்று காலை தேர்தல் கமிஷனில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம், அ.தி.மு.க.வின் ஆட்சேபம் தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை முடிந்து வெளியே வந்த வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், “கட்சி பதிவு தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சிறு விளக்கம் கேட்டார்கள். நாங்கள் அதற்கு தெளிவாக பதில் கொடுத்தோம். ஜெயலலிதா பொதுவான தலைவர். அவரது புகைப்படத்தை பயன்படுத்துவதில் எந்த தவறும் கிடையாது என்றும் கூறினோம். கட்சி பெயரில் அம்மா என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், சசிகலா ஜெயிலில் இருந்து விரைவில் வெளியே வருவார் என்றும், அ.தி.மு.க.வை மீட்டெடுப்பார் என்றும், அ.ம.மு.க.வுக்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் வழங்கப்படாத காரணத்தால்தான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தரப்பினரிடம் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்துவதாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க.வினர் கால அவகாசம் கேட்டதாக தெரிகிறது.
இதனால் அவர்களிடம் நடத்த வேண்டிய விசாரணை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story