அயோத்தி வழக்கு : முஸ்லீம்கள் நிலத்தின் மீதான உரிமைகோரலை கைவிட தயாராக இல்லை -வழக்கறிஞர்கள் மறுப்பு
அயோத்தி வழக்கில் முஸ்லீம்கள் நிலத்தின் மீதான உரிமைகோரலை கைவிட தயாராக இருப்பதாக தெரிவிக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் கூறி உள்ளனர்.
புதுடெல்லி
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் யோசனையை முன்வைத்தது. அதற்காக, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, சமரச குழுவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அக்குழுவின் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வழக்கை ஆகஸ்டு 6-ந் தேதி முதல், வக்கீல்கள் விவாதம் முடிவடையும் வரை தினசரி அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
தினசரி அடிப்படையில் அதே அமர்வில் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று 40-வது நாளாக நடைபெற்றது. அயோத்தி வழக்கு விசாரணை தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துபூர்வமான வாதங்களை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று அயோத்தி வழக்கில், தொடர்புள்ள சில இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சமரசத் தீர்வுக்கு உடன்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சன்னி வக்பு வாரியம் சமரச தீர்வுக்கு சம்மதித்து இருப்பதாகவும் முஸ்லீம்கள் நிலத்தின் மீதான உரிமைகோரலை கைவிட தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவலை முஸ்லீம் அமைப்பின் 5 வக்கீல்கள் மறுத்து உள்ளனர்
இது தொடர்பாக சுப்ரீம் கோர்டின் ஐந்து வழக்கறிஞர்கள் ஒரு கூட்டு அறிக்கையை இன்று வெளியிட்டனர். அதில் ராம ஜென்மபூமி-பாப்ரி மஜித் நிலம் மீதான தங்கள் கோரிக்கையை முஸ்லிம்கள் கைவிட தயாராக இருப்பதாக வந்த ஊடக அறிக்கைகளை மறுத்தன. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்த குழு அல்லது நிர்வாணி அகாரா இந்த செய்திக்கு பின்னால் இருக்கலாம் என்று கூறினர்.
இந்த அறிக்கை உத்தரபிரதேசம் சன்னி மத்திய வக்ஃபு வாரியம் வக்கீல்கள் மற்றும் வக்கீல்கள் எஜாஸ் மக்பூல், ஷகில் அகமது சையத், எம்.ஆர்.சம்ஷாத், இர்ஷாத் அஹ்மத் மற்றும் புசாயில் அகமது அய்யூயி ஆகியோர்களால் வெளியிடப்பட்டது.
Related Tags :
Next Story