ஐ.என்.எக்ஸ். மீடியா ப.சிதம்பரத்திற்கு ரூ.35 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தகவல்


ஐ.என்.எக்ஸ். மீடியா ப.சிதம்பரத்திற்கு ரூ.35 கோடி லஞ்சம்  கொடுக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2019 4:07 PM IST (Updated: 19 Oct 2019 4:07 PM IST)
t-max-icont-min-icon

ஐ.என்.எக்ஸ். மீடியா ப.சிதம்பரம்- கார்த்தி சிதம்பரத்திற்கு ரூ.35 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அமலாக்கத்துறையும் அவரை கைது செய்து உள்ளது.

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தனிக்கோர்ட்டில் நீதிபதி லால் சிங் முன்னிலையில்  சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், எம்.பி., ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன நிர்வாகி பீட்டர் முகர்ஜி, அந்த நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியும் பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவியுமான இந்திராணி முகர்ஜி, ஆடிட்டர் எஸ்.பாஸ்கரராமன், நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீகுல்லர், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுப் கே.பூஜாரி, மற்றும் சில நபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட 15 பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான இந்திராணி முகர்ஜி இந்த வழக்கில் அப்ரூவராகவும் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் வருகிற திங்கட்கிழமை இந்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சி.பி.ஐ.  தாக்கல் செய்த  குற்றப்பத்திரிகையில் சிங்கப்பூர், மொரீஷியஸ், பெர்முடா, இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்த் போன்ற அயல்நாடுகள்  மூலம் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் ( சுமார் ரூ.35 கோடி) லஞ்சம் கொடுத்ததாக இந்திராணி முகர்ஜி கூறியதாக தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட  ரூ .4.62 கோடி  அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக  ரூ.403.07 கோடியாக பெற்றுள்ளது தொடர்பாக  ஐ.என்.எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐ 2017 மே மாதம் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அதில் கூறி உள்ளது. 

Next Story