சுதந்திர இந்தியா முதல் 2019 ஆகஸ்டு வரை உயிர் தியாகம் செய்த போலீசார் எண்ணிக்கை 35,136
நாடு விடுதலை பெற்றதில் இருந்து இந்த வருடம் ஆகஸ்டு வரையில் 35,136 போலீசார் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
நாக்பூர்,
நாடு முழுவதும் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து இந்த வருடம் ஆகஸ்டு வரையில் தீவிரவாத ஒழிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் பணியின்பொழுது உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 292 ஆக உள்ளது.
சீன படைகளால் கடந்த 1959ம் ஆண்டில் சுட்டு கொல்லப்பட்ட 10 போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை காவலர் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் 292 பேரின் பெயர்கள் வாசிக்கப்படும்.
இவர்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) உள்ளிட்ட துணை ராணுவத்தினரும் அடங்குவர்.
இவர்களில் பயங்கரவாதிகள் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான போரில் மிக அதிக எண்ணிக்கையில் 67 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இவர்களில் புல்வாமாவில் கடந்த பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களும் அடங்குவர்.
இவர்கள் தவிர்த்து பி.எஸ்.எப். அதிகாரிகள் 41 பேர், இந்தோ திபெத்திய எல்லை காவல் படையை சேர்ந்த 23 பேர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல் படையை சேர்ந்த 24 பேர் இந்த ஒரு வருடத்தில் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த வருடம் மே மாதத்தில் கட்சிரோலியில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடி தாக்குதலில் பலியான 15 காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 20 மராட்டிய காவல் துறை அதிகாரிகளும் இந்த பட்டியலில் உள்ளனர்.
இவர்கள் தவிர, சத்தீஷ்கார் போலீசார் 14 பேர், கர்நாடக போலீசார் 12 பேர், ரெயில்வே பாதுகாப்பு படையினர் 11 பேர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் போலீசார் தலா 10 பேர், பீகார் போலீசார் 7 பேர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 6 பேர் இந்த காலகட்டத்தில் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த பட்டியலில், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், அருணாசல பிரதேசம், அரியானா, மணிப்பூர், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், சிக்கிம், இமாசல பிரதேசம் மற்றும் திரிபுராவின் காவல் படையினரும், சஹஸ்திர சீமா பால, தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் அடங்குவர்.
எல்லை கடந்த பயங்கரவாதம் மற்றும் நக்சல்வாதம் ஆகியவற்றுக்கு எதிரான போரிலேயே நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான துணை ராணுவ படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள், சாராயம் மற்றும் மணல் மாபியாக்கள் மற்றும் பிற சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளில் மாநில போலீசார் உயிரிழந்து உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
இதேபோன்று நாடு விடுதலை அடைந்ததில் இருந்து இந்த வருடம் ஆகஸ்டு வரையில் 35,136 போலீசார் நாட்டை பாதுகாக்கும் பணி மற்றும் மக்களை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story