காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல்- பிபின் ராவத்
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல் நடத்தினோம் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் வன்முறையை நிகழ்த்த திட்டமிட்ட பாகிஸ்தான், அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டம் வகுத்து வருகிறது. எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதனிடையே ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தங்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் பலியாகினர். பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற தாக்குதல் குறித்து பிபின் ராவத் கூறுகையில், “காஷ்மீரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக, எல்லை தாண்டி பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து ஊடுருவ முயற்சித்து வருகின்றனர்.எனவே அதனை தடுக்கவே எதிர்தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாய நிலையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 10 பேரும், பயங்கரவாதிகள் பலரும் பலியாகினர்.
மேலும் பல பயங்கரவாதிகள் காயமடைந்திருக்கலாம். இந்த ராணுவத்தாக்குதலில் எல்லையில் பயங்கரவாதிகளின் மூன்று முகாம்களை அழித்துள்ளோம். காஷ்மீரில் இயல்புநிலை திரும்பும் நிலையில் அமைதியை சீர்குலைக்க செய்யும் இத்தகைய ஊடுருவலை தடுக்க தக்க பதிலடி கொடுப்போம்” என்றார்.
Related Tags :
Next Story