2-வது இந்திரா, ‘பிரியங்கா’: 2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - மாநில தலைவர் நம்பிக்கை


2-வது இந்திரா, ‘பிரியங்கா’: 2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - மாநில தலைவர் நம்பிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2019 4:30 AM IST (Updated: 21 Oct 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் 2022-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு நம்பிக்கை தெரிவித்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச காங்கிரசின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் அஜய்குமார் லல்லு. கட்சியின் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய பொறுப்பாளருமான பிரியங்காவின் ஆதரவாளரான அஜய்குமார் லல்லு, மாநிலத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கையும், ஆதரவையும் மீண்டும் பெறுவதற்காக கடினமாக முயற்சிப்பதுடன், இதற்காக தீவிரமாகவும் பாடுபடுவோம். அதற்காக கிராமங்கள் அளவிலும், மாவட்ட அளவிலும் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

கட்சியை பலப்படுத்த மாவட்டம், வட்டாரம், தாலுகா, பஞ்சாயத்து அளவில் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், கூட்டங்கள், பயிற்சி திட்டங்கள் நடத்தப்படுகின்றன. கட்சியின் முன்னணி அமைப்புகள் அனைத்தும் கடினமாக உழைத்து வருகின்றன. குறிப்பாக அன்றாட பயிற்சிகள் மூலம் காங்கிரஸ் சேவாதளம் வலுப்படுத்தப்படுகிறது.

பிரியங்கா காந்தி, இரண்டாவது இந்திரா காந்தி ஆவார். அவர் ஒரு மாற்றத்தின் புயல். அவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி உத்தரபிரதேசத்தில் 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்.

பிரியங்கா மற்றும் ராகுல் காந்தியை பார்த்து இந்த யோகி ஆதித்யநாத் அரசு அச்சப்படுகிறது. ஏனெனில் ராகுலும், பிரியங்காவும் தெருவில் இறங்கி மக்களை சந்தித்தால், தங்கள் பாடு திண்டாட்டம்தான் என்பது அவர்களுக்கு தெரியும்.

பா.ஜனதாவின் தவறான கொள்கைகளுக்கு எதிராகவே நாங்கள் போராடி வருகிறோம். மாநிலத்தில் விவசாயிகள் அழிக்கப்பட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் நிலைமை மோசத்தில் இருந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேசத்தில் முதலீடு செய்வதற்கு தொழிலதிபர்கள் யோசிக்கிறார்கள். ஏற்கனவே முதலீடு செய்திருந்தவர்களும் மாநிலத்தை விட்டு வெளியேற யோசித்து வருகின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பையும், வசதிகளையும் பா.ஜனதா அரசு வழங்கவில்லை. இந்த பிரச்சினைகளுக்காகவே நாங்கள் போராடுகிறோம். இவ்வாறு அஜய்குமார் லல்லு கூறினார்.


Next Story