கர்நாடக ரெயில் நிலையத்தில் ‘டிபன்பாக்ஸ்’ குண்டு வெடித்து கேண்டீன் ஊழியர் காயம்


கர்நாடக ரெயில் நிலையத்தில் ‘டிபன்பாக்ஸ்’ குண்டு வெடித்து கேண்டீன் ஊழியர் காயம்
x
தினத்தந்தி 21 Oct 2019 3:27 PM IST (Updated: 22 Oct 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக ரெயில் நிலையத்தில் ‘டிபன்பாக்ஸ்’ குண்டு வெடித்து கேண்டீன் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள உப்பள்ளி ரெயில் நிலையத்தில் நேற்று ‘டிபன்பாக்ஸ்’ குண்டு வெடித்தது. இதில் கேண்டீன் ஊழியர் கை சிதைந்தது. தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகளின் சதியா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்றும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் உள்ள உப்பள்ளி ரெயில் நிலையம் நேற்று காலை பயணிகள் நடமாட்டத்தால் பரபரப்புடன் காணப்பட்டது. ரெயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் மதியம் 1 மணி அளவில் ஆந்திர மாநிலம் விஜயவாடா- உப்பள்ளி இடையே இயங்கும் அமராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச்சென்ற பிறகு ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு பெட்டியில் 10 ‘டிபன்பாக்ஸ்’கள் இருந்தது. இவற்றை ரெயில்வே பாதுகாப்பு படையினர் எடுத்துக் கொண்டு நடைமேடைக்கு வந்தனர். அப்போது ரெயில்வே கேண்டீனில் ஊழியர் ஹுசைன் சாப் (வயது 22) என்பவர் ஒரு டிபன்பாக்சை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமான அந்த டிபன்பாக்ஸ் வெடித்து சிதறியது. இதில் ஹுசைன் சாப்பின் கை சிதைந்தது. மேலும் 2-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் லேசான காயமடைந்தனர். டிபன்பாக்ஸ் குண்டு வெடித்ததில் ரெயில் நிலைய அதிகாரி அறையின் ஜன்னல்-கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இதனால் அங்கு கூடியிருந்த ரெயில் பயணிகளும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த உப்பள்ளி ரெயில்வே போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெடித்தது போக மீதமுள்ள டிபன்பாக்ஸ்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதற்கிடையே காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது மீதம் இருந்த 9 டிபன்பாக்ஸ்களிலும் குண்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் கைப்பற்றி ரெயில் நிலையம் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்துக்கு எடுத்துச்சென்று செயலிழக்க செய்தனர்.

தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் நேற்று உப்பள்ளி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உப்பள்ளி ரெயில்வே போலீசாரும், உப்பள்ளி டவுன் போலீசாரும் வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story