ஆரே காலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணியை தொடரலாம்- உச்ச நீதிமன்றம்
ஆரே காலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணியை தொடரலாம் எனவும் அடுத்த விசாரணை நடைபெறும் வரை மரங்களை வெட்டக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மும்பையில் உள்ள ஆரே காலனி, ஏராளமான மரங்களைக் கொண்ட வனம் போன்ற பகுதியாகும். அங்கு மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் இருக்கும் 2,656 மரங்களை வெட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டும் பணியை ரெயில்வே நிர்வாகம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேற்கூறிய மனு தொடர்பான விசாரணை மீண்டும் இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மெட்ரோ பணிமனை அமைக்கும் பணியை தொடரலாம் எனவும் ஆனால், அடுத்த விசாரணை நடைபெறும் வரை மரங்களை வெட்டக்கூடாது எனவும் தெரிவித்து, மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Related Tags :
Next Story