வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு : நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்


வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு : நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்  நாளை வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Oct 2019 9:54 PM IST (Updated: 21 Oct 2019 9:54 PM IST)
t-max-icont-min-icon

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

புதுடெல்லி,

10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இனி 4 வங்கிகளாக இயங்கும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.  வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்தும், வங்கிகளை முழுக்க முழுக்க தனியார் மயமாக்கும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த செயலை கண்டித்தும் அகில இந்திய அளவில், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில்  வங்கி ஊழியர்கள் அக்டோபர் 22-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தை தவிர்ப்பதற்காக மத்திய அரசின் தொழிலாளர்துறை ஆணையர் தலைமையில் டெல்லியில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைதொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தவாறு நாளை காலை 6 மணி முதல் 22-ம் தேதி காலை 6 மணிவரை வேலைநிறுத்தம் நடைபெறும். மேற்கண்ட இரு சங்கங்களை சேர்ந்த சுமார் 3.5 லட்சம் பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டேபசிஷ் பாசு சவுத்ரி ஆகியோர் இன்று மாலை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்த அழைப்பில் வங்கி உயரதிகாரிகளும் தனியார் வங்கிகளும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறப்படுகிறது.


Next Story