பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை


பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2019 11:30 PM GMT (Updated: 21 Oct 2019 9:50 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி நடவடிக்கைகள் தொடரும் என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.

லே,

காஷ்மீரின் லடாக் பிராந்தியத்துக்கு உட்பட்ட லே மாவட்டத்தில் சீனாவுடனான உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே ஷியோக் ஆற்றின் குறுக்கே 1400 அடி நீள பாலம் கட்டப்பட்டு உள்ளது. கர்னல் செவாங் ரிஞ்சன் பாலம் என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த பாலத்தை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுக்கு எதிராக நமது வீரர்கள் ஒருபோதும் அத்துமீறுவது இல்லை. ஆனால் அவர்களோ பயங்கரவாத செயல்கள் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்கள் மூலம் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தவோ, கட்டுப்படுத்தவோ வேண் டும். இல்லையென்றால் தகுந்த பதிலடி கொடுப்பதை நாங்கள் தொடர்வோம்.

இந்தியா-சீனா இடையே சுமுகமான உறவு நீடிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை அனைத்தும் மிகுந்த முதிர்ச்சியுடனும், பொறுப்புடனும் கையாளப்பட்டு உள்ளன. இந்த பிரச்சினைகள் கையை மீறி செல்வதை இரு நாடுகளும் அனுமதிக்கவில்லை.

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் உள்நாட்டு பிரச்சினை ஆகும். இதனால்தான் சமீபத்தில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது சீன அதிபர் ஜின்பிங் கூட காஷ்மீர் குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை. இதைத்தவிர பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாடு சமீபத்தில் கூறியிருந்ததையும் முக்கியமாக பார்க்க வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சீன எல்லை அருகே கட்டப்பட்டு உள்ள இந்த பாலம் அனைத்து காலநிலையிலும் பயணிக்க ஏற்றதாகும். இதன் மூலம் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்கள் எளிதில் எல்லை பகுதிகளை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்துக்கு சமீபத்தில் இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தபோது, பாகிஸ்தானில் உள்ள 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் நேற்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பாகிஸ்தானில் அதிக தூரம் ஊடுருவி இந்த முகாம்களை அழிப்போம்’ என்று உறுதிபட தெரிவித்தார்.


Next Story