கூட்டணி வேண்டாம்; பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சியை இணைக்க பாஜக மறைமுக முயற்சி


கூட்டணி வேண்டாம்; பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சியை இணைக்க பாஜக மறைமுக முயற்சி
x
தினத்தந்தி 22 Oct 2019 1:16 PM GMT (Updated: 22 Oct 2019 1:16 PM GMT)

ஆந்திராவில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சியை இணைக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

விசாகபட்டினம்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் இணைவதற்கு பாஜக  பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜி வி எல் நரசிம்ம ராவ், பாஜகவுடன் இணைவதற்குத் தயாரா என்று இரண்டு முறை தெலுங்குதேசம் கட்சியிடம் கேட்டுள்ளார், மேலும் தெலுங்கு தேசம் தயாராக இருந்தால் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் முன்வந்தார்.

நடந்து முடிந்த 2019 ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் 1 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி 40 சதவீதம் வாக்குகளை பெற்ற கட்சியை இணைக்கும்படி கேட்டு உள்ளது. இது தென்னிந்தியாவின்  தற்போதைய அரசியல் நிலை மற்றும் தென்னிந்தியாவில் தனது விரிவாக்கத்திற்கான பாஜகவின் திட்டத்துடன் தொடர்புடையது.

கர்நாடகாவைத் தவிர தென் மாநிலங்களில் ஒரு வல்லமைமிக்க சக்தியாக வளர முடியாததால் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியை  இணைத்து கொள்ள துடிக்கிறது.

ஒரு காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த த.தே.கூவை பலவீனப்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறது.

2014 சட்டமன்றத் தேர்தலில் 117 இடங்களுடன் ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி, 2019 ஏப்ரல் சட்டமன்ற தேர்தலில் 23 இடங்களில் மட்டுமே  வெற்றிபெற்றது. அதன் எம்பிக்கள்  எண்ணிக்கை 16-ல் இருந்து வெறும் மூன்றாக சரிந்தது. மேலவையில் கட்சியின் பலம் இப்போது இரண்டாக குறைந்துவிட்டது.

தேர்தல் களத்தில் இந்த மோசமான சரிவுக்கு பின்னர் அதன் செல்வாக்குமிக்க தலைவரான சந்திரபாபு நாயுடு பின்னடைவை சதித்து வருகிறார்.

மேலும், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் மாநில அரசு நாயுடு மற்றும் அவரது கட்சியின் பல தலைவர்கள் மீது பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் தவறானவை மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  போடப்பட்டவை என்று தெலுங்கு தேசம் கூறி வருகிறது.

சந்திரபாபு நாயுடு அதிகாரத்தை இழந்த பின்னர் பல தரப்பில் இருந்து  கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறார்.

பிரிக்கப்படாத ஆந்திராவின் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சியாக உள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பாஜக  தலைமையிலான கூட்டணியில் இருந்து சந்திரபாபு வெளியேறினார். அதன் பிறகு அவரது கட்சி பல்வேறு சிக்கல்களை  சந்தித்து வருகிறது.

இது குறித்து தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறும்போது,

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து நாங்கள் பாஜக தலைமையிலான அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம். ஆனால் முடிவு எங்களுக்கு மிகவும் பாதகமாக அமைந்தது. மத்திய அரசின்  ஒத்துழையாமை காரணமாக நாங்கள் பொருளாதார ரீதியாக இழந்தது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக தெலுங்கு தேசம் கட்சி அதிகாரத்தை இழந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை நாங்கள் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

இந்த அறிக்கையை பாஜக கூட்டணிக்கு திரும்புவதற்கான நாயுடுவின் விருப்பத்தை அடையாளம் காட்டுவதாக பாஜக கருதியது.

ஆந்திராவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜி வி எல் நரசிம்ம ராவ் கூறும்போது,  நாயுடு தனது தெலுங்கு தேசம் கட்சியை பாஜகவுடன் இணைக்கத் தயாராக இருந்தால்  தனது கட்சியின் தலைமையுடன் பேசலாம் என்று அவர் கூறினார்.

தெலுங்குதேசம் உடன் இனி கூட்டணி கிடையாது என பாஜக ஏற்கனவே  தெளிவுபடுத்தியுள்ளது. கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியுடன் எந்தவிதமான பிணைப்பும் இருக்கக்கூடாது என்று பாஜகவின் மாநிலத் தலைவர்கள் மத்திய தலைமைக்கு தெரிவித்து உள்ளனர்.

மாநிலத்தில் கூட்டணிக்கான எந்தவொரு சாத்தியத்தையும் நிராகரித்து  கட்சியை இணைப்பதற்கான அழைப்பு விடுத்து உள்ளது.

எவ்வாறாயினும், பாஜகவின் அத்தகைய அழைப்பு நிச்சயமாக தெலுங்கு தேசம் கட்சியில் நெருக்கடி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதன் தலைவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஊழல் குற்றச்சாட்டுகளை  எதிர் கொள்கின்றனர். பாஜக  இணைப்பு பற்றிய யோசனை, தெலுங்குதேசம் கட்சியில் உள்ள தலைவர்கள் பாஜகவுக்கு செல்லும் ஓட்டத்தை விரைவுபடுத்தும்.

மராட்டிய மாநில பாஜகவின் வெற்றிக் கதை, அது 2014 வரை சிவசேனாவுடன்  பங்காளியாக இருந்தது மற்றும் அரியானாவில் 2014 வரை மிகச் சிறிய கட்சியாக இருந்த போதிலும் ஆட்சி அமைத்தது. அதேபோல் ஆந்திராவில்  பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை நெருக்குகிறது.

Next Story