தேசிய செய்திகள்

இந்திய பத்திரிகையாளர்களும் குறிவைப்பு: உலகம் முழுவதும் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் - மத்திய அரசு விளக்கம் கேட்கிறது + "||" + All over the world whatsapp information spy Trauma information The federal government is asking for clarification

இந்திய பத்திரிகையாளர்களும் குறிவைப்பு: உலகம் முழுவதும் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் - மத்திய அரசு விளக்கம் கேட்கிறது

இந்திய பத்திரிகையாளர்களும் குறிவைப்பு: உலகம் முழுவதும் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் - மத்திய அரசு விளக்கம் கேட்கிறது
இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள் உள்பட உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
புதுடெல்லி,

‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.


இந்நிலையில், ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் நேற்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. உலகம் முழுவதும் பலரது ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறியது.

இதுகுறித்து ‘வாட்ஸ்-அப்’ கூறியதாவது:-

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு நிறுவனம், ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருளை தயாரித்துள்ளது. அந்த மென்பொருளை பயன்படுத்தி, அடையாளம் தெரியாத சில நிறுவனங்களின் உளவாளிகள், உலகம் முழுவதும் 1,400 பேரின் மொபைல் போன்களில் ஊடுருவி தங்கள் வசப்படுத்தி உள்ளனர். அந்த போன்களில் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பரிமாறப்படும் முக்கியமான தகவல்களை திருடி உள்ளனர். ‘வாட்ஸ்-அப்’ தகவல் பரிமாற்றங்களை உளவு பார்த்துள்ளனர்.

உளவு பார்க்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் 4 கண்டங்களில் இருக்கிறார்கள். இவர்களில், இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் எதிரிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர்.

இந்த தகவல் அறிந்தவுடன் என்.எஸ்.ஓ. நிறுவனம் மீது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும், உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் 1,400 பேரின் மொபைல் போன்களுக்கும் விசேஷ ‘வாட்ஸ்-அப்’ செய்தி அனுப்பி, உஷார்படுத்தி உள்ளோம். இவ்வாறு ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் கூறியது.

ஆனால், இந்தியாவில் எத்தனை பேர் உளவு பார்க்கப்பட்டனர் என்ற விவரத்தை ‘வாட்ஸ்-அப்’ தெரிவிக்கவில்லை. யாருடைய உத்தரவின்பேரில், உலகம் முழுவதும் உளவு பார்க்கப்பட்டது என்ற விவரத்தையும் கூறவில்லை.

பயனாளர்களின் அடிப்படை அந்தரங்க உரிமைகளை பாதுகாக்க ‘வாட்ஸ்-அப்’ உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைவர் வில் கேத்கார்ட் தெரிவித்துள்ளார். உளவு விவகாரத்தை விசாரிக்க ‘வாட்ஸ்- அப்’புக்கு டொரண்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள சிட்டிசன் ஆய்வுக்கூடம் உதவி செய்துள்ளது.

இந்நிலையில், உளவு மென்பொருளை உருவாக்கியதாக கூறப்படும் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இதற்கிடையே, இந்த உளவு விவகாரம், இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்திடம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

குற்றச்சாட்டு குறித்தும், இந்தியாவில் எத்தனைபேர் உளவு பார்க்கப்பட்டனர் என்பது பற்றியும் விரிவான விளக்கத்தை நவம்பர் 4-ந் தேதிக்குள் அளிக்குமாறு ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

அதே சமயத்தில், உளவு விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.