அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ .95,380 கோடியாக குறைந்தது


அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ .95,380 கோடியாக குறைந்தது
x
தினத்தந்தி 1 Nov 2019 5:29 PM GMT (Updated: 2019-11-01T22:59:30+05:30)

கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ .95,380 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அக்டோபர் மாதம் ஜி.எஸ்.டி.யில் கிடைத்த வருவாய் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் நடப்பாண்டு அக்டோபரில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.95,380 கோடியாக இருந்தது. இது, முந்தைய செப்டம்பா் மாதத்தில் ரூ.91,916 கோடியாகவும், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் ரூ.1,00,710 கோடியாகவும் இருந்தது.

அக்டோபா் மாத மொத்த ஜி.எஸ்.டி. வசூலில், சி.ஜி.எஸ்.டி. ரூ.17,582 கோடியாகவும், எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.23,674 கோடியாகவும், ஐ.ஜி.எஸ்.டி. ரூ.46,517 கோடியாகவும் (இறக்குமதிக்கான வசூல் ரூ.21,446 கோடி உள்பட), தீா்வை ரூ.7,607 கோடியாகவும் (இறக்குமதி வசூல் ரூ.774 கோடி உள்பட) இருந்தன. மேலும் செப்டம்பருக்கான ஜி.எஸ்.டி.ஆா். 3பி படிவங்களை தாக்கல் செய்தவா்களின் மொத்த எண்ணிக்கை (அக்டோபா் 30ம் தேதி நிலவரப்படி) 73.83 லட்சமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட இந்தாண்டு அக்டோபரில் 5.29% அளவு ஜி.எஸ்.டி. வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story