சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க சோனியாவுக்கு காங்கிரஸ் எம்.பி. வேண்டுகோள்
சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என சோனியா காந்திக்கு காங்கிரஸ் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாக்பூர்,
மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 24ந்தேதி வெளியானது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 தொகுதிகளும் கிடைத்தன.
ஆட்சி அமைக்க போதிய தொகுதிகளை பா.ஜ.க. பெறாத நிலையில், அக்கட்சிக்கும் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் இடையே அதிகார பகிர்வில் ஒப்புதல் ஏற்படவில்லை.
இந்த நிலையில், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்து வருகிறது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினர். பாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க இது சிறந்த திட்டம் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்களும் பச்சை கொடி காட்டினர்.
இந்த விஷயத்தில் சோனியா காந்தியின் ஒப்புதலை பெற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட், முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோர் டெல்லி விரைந்தனர். இரவில் அவர்கள் சோனியா காந்தியை சந்தித்து பேசினர்.
இந்நிலையில், நாடாளுமன்ற மேலவை எம்.பி.யான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உசைன் தல்வாய் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சிவசேனா கட்சியானது, அரசு அமைக்க வேண்டி, அதற்கான கோரிக்கையுடன் முன்வருமெனில் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியானது ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
அதில், சிவசேனா மற்றும் பா.ஜ.க. இரண்டும் வேறுபட்டவை. பிரதீபா பாட்டில் மற்றும் பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவர்களாவதற்கு சிவசேனா கட்சியினர் ஆதரவு வழங்கினர். பா.ஜ.க. போன்று சிவசேனாவின் அரசியல் இல்லை. பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைப்பதற்கு சிவசேனா கட்சியினருக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.யின் இந்த கடிதத்திற்கு சிவசேனா வரவேற்பு அளித்து உள்ளது.
Related Tags :
Next Story