எம்எல்ஏக்கள் ராஜினாமா : அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன - எடியூரப்பா வீடியோவால் சர்ச்சை
கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில், அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக, முதலமைச்சர் எடியூரப்பா கூறும் ஆடியோ ஒன்று வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு எதிராக அந்த கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கியதால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
பின்னர் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், பாஜக நிர்வாகிகளிடம் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள அந்த ஆடியோவில், எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வை செய்தது அமித்ஷாதான் என்று கூறுவது போல பதிவாகியுள்ளது.
ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் மும்பையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்தும் அமித்ஷாவுக்கு தெரிந்தே நடந்ததாக எடியூரப்பா கூறுவது போலவும் ஆடியோ பதிவாகியுள்ளது.
நம்மை ஆளுங்கட்சியாக்கியுள்ள அந்த 17 முன்னாள் எம்எல்ஏக்கள் பக்கம் பாஜகவினர் நிற்க வேண்டும் என்றும், அவர்களுக்கு மதிப்பளித்து முறையாக நடத்த வேண்டும் என்றும் எடியூரப்பா கூறுவதாக ஆடியோவில் உள்ளது.
இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து எடியூரப்பா கேள்வி எழுப்பவில்லை என்பதோடு, கட்சியின் நலன் கருதி பாஜகவினரோடு அவ்வாறு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பணம், அதிகாரத்தை பாஜக எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
அமித்ஷாவும் எடியூரப்பாவும் செய்தது ஜனநாயகப் படுகொலைக்கான சதி என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
Related Tags :
Next Story