போலீசார் - வக்கீல்கள் மோதல்: அனைவரும் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும் - டெல்லி துணை நிலை ஆளுநர் வேண்டுகோள்


போலீசார் - வக்கீல்கள் மோதல்: அனைவரும் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும் - டெல்லி துணை நிலை ஆளுநர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Nov 2019 7:19 PM IST (Updated: 5 Nov 2019 7:19 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போலீசார் - வக்கீல்கள் மோதல் போக்கை விடுத்து அனைவரும் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும் என டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் கடந்த சனிக்கிழமை, போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், 20-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. 

கலவரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், வன்முறை சம்பவம் குறித்து 6 வாரத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி.கார்க்கை நியமித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், டெல்லி காவல்துறை அதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் சில வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஈடுபட்டன. போலீசார் மீது வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டிக்கும் விதமாக டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தநிலையில்,  டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என போலீசாருக்கு ஆதரவாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் கருத்து தெரிவித்துள்ளார்.  அனைவரும் சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், போராடும் காவலர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமாட்டாது என்றும் உறுதி அளிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.

தாக்குதலில் காயம் அடைந்த காவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் காயம் அடைந்த டெல்லி போலீசாருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். காயமடைந்த காவலர்களை அதிகாரிகள் சென்று குறைகளை கேட்டறிய துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் உத்தரவிட்டுள்ளார்.

Next Story