டெல்லியில் ஜிகே.வாசன் முகாம் : பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு தமாகாவை பாஜகவுடன் இணைக்க திட்டமா?


டெல்லியில் ஜிகே.வாசன் முகாம் : பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு தமாகாவை பாஜகவுடன் இணைக்க திட்டமா?
x
தினத்தந்தி 6 Nov 2019 6:08 AM GMT (Updated: 6 Nov 2019 6:08 AM GMT)

டெல்லியில் ஜிகே.வாசன் முகாமிட்டு உள்ளர். பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தஞ்சை தொகுதியில் போட்டியிட்டது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அ.தி.மு.க., பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதன் பிறகு நடந்த இடைத்தேர்தல்களிலும் இந்த கூட்டணியை ஆதரித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடியையும், மத்திய அரசு திட்டங்களையும், தமிழக அரசையும் ஆதரித்து வருகிறார். சமீபத்தில் சீன அதிபரை சந்திப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் நேரில் சென்று வரவேற்றார். அப்போது தன்னை டெல்லியில் வந்து சந்திக்கும்படி மோடி அழைப்பு விடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதற்கிடையே ஜி.கே.வாசனை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது தமிழக பா.ஜனதாவில் தலைவர் பதவி காலியாக உள்ளதால் த.மா.கா.வை பா.ஜனதாவுடன் இணைத்து ஜி.கே.வாசனை தலைவராக்க அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த ஜி.கே.வாசன் இதற்கு தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. த.மா.கா.வை பா.ஜனதாவுடன் இணைப்பதை தொண்டர்கள் ஏற்பார்களா? வாசன் எடுக்கும் முடிவு என்ன? என்பது பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜி.கே.வாசன் டெல்லி சென்றுள்ளார். அவர் அங்கு முகாமிட்டு இன்று காலை  பிரதமர் மோடியை  அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இதுபோல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் ஜி.கே.வாசன் சந்திக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஜி.கே.வாசன் முடிவு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம்  மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்தார். சந்திப்பின் போது முரளிதரராவ், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார் என தகவல் வெளியாகியது. ஆனால் இதனை ஜி.கே வாசன் மறுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story