திரிபுராவில் பட்டினியால் 6 பேர் உயிரிழப்பு எதிரொலி: பழங்குடி மக்கள் மறியல் போராட்டம்


திரிபுராவில் பட்டினியால் 6 பேர் உயிரிழப்பு எதிரொலி: பழங்குடி மக்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2019 8:09 PM IST (Updated: 6 Nov 2019 8:56 PM IST)
t-max-icont-min-icon

திரிபுராவில் பட்டினியால் 6 பேர் உயிரிழந்தது எதிரொலியாக அங்கு பழங்குடி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மிசோரம் மாநிலங்களில்  புரூ என்ற பழங்குடி மக்கள் கணிசமாக வசித்து வருகிறார்கள். 

மிசோரமில் 1997-ல் அவர்களுக்கும், மாற்று சமூகத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக ஏராளமான புரூ என்ற பழங்குடி மக்கள் திரிபுராவுக்கு அகதிகளாக வந்தனர். இவர்களில் 35 ஆயிரம் பேர் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட அளவு பண உதவி மற்றும் ரேசன் பொருட்களை வழங்கி வந்தது.

சமீபத்தில் இந்த உதவிகளை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.  இதனால் போதிய உணவு கிடைக்காமல் இந்த மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் அகதி முகாமில் இருந்த ஒரு குழந்தை உள்பட 6 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

ரேசன் பொருள் கிடைக்காததால் பட்டினி கிடந்து 6 பேரும் இறந்து விட்டதாக புரூ பழங்குடி அமைப்பினர் குற்றம் சாட்டினார்கள். இந்த சம்பவத்தால் அவர்கள்  மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் ரேசன் பொருட்களை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி  அனந்தபசாரில் இருந்து கஞ்சாபூர் செல்லும் சாலைகளில் ஆங்காங்கே தடைகளை ஏற்படுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை திரிபுராவின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். அது, துண்டிக்கப்பட்டுள்ளதால் திரிபுரா மாநிலமே ஸ்தம்பித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் மிசோரம் மாநிலத்துக்கும் இந்த பாதை வழியாகத்தான் வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வரவேண்டும். சாலை துண்டிப்பால் அந்த மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மீண்டும் ரேசன் பொருள், நிதி உதவிகளை செய்ய வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று புரூ பழங்குடி அமைப்பினர்  கூறி உள்ளனர்.

போராட்டத்தால் கலவரம் ஏற்படலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. எனவே, திரிபுரா மாநிலம் வடக்கு பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story