தேசிய செய்திகள்

மண்டல- மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந்தேதி நடைதிறப்பு + "||" + Mandala and Mahaga vilakku pooja Opening Ceremony of Ayyappan Temple at Sabarimala

மண்டல- மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந்தேதி நடைதிறப்பு

மண்டல- மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந்தேதி நடைதிறப்பு
மண்டல- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
சபரிமலை, 

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து விரதம் தொடங்கி, இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பின்னர் மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதியும், ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

நடை திறக்கப்படும் நாளான 16-ந் தேதி அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.

தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதீர் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18 படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். இருமேல் சாந்திகளையும் படியிறங்கும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி 18-ம் படி வழியாக அழைத்து செல்வார்.

6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள். மேலும் அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.

17-ந் தேதி அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.

அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, சபரிமலையில் இந்த ஆண்டு கூடுதலாக அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பம்பை, சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீருக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இப்பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக தினசரி 3½ லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரும், 1½ லட்சம் லிட்டர் சுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடந்த ஆண்டை போல், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தெரிவித்து உள்ளார்.