அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - பினராயி விஜயன்
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்குத் தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்,
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை வைக்கலாம் என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றம் பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு மூலம் அயோத்தி நிலம் தொடர்பான சட்டபூர்வமான விஷயங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், மதிப்பளிக்க வேண்டும். இந்தியர்களாகிய நாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பணிந்து நடக்க வேண்டும். மாநிலத்தின் அமைதி குலையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கிறேன்.
அமைதியை நிலைநாட்ட அரசு முழுமையாக தயாராகி இருக்கிறது. அமைதியைக் குலைக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது. போலீசார் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story