முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் வாழ்க்கை குறிப்பு


முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் வாழ்க்கை குறிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2019 8:11 AM IST (Updated: 11 Nov 2019 8:11 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் நேற்று மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 86.

சென்னை,

கேரளாவின் பாலக்காட்டில் திருநெல்லை என்ற கிராமத்தில் கடந்த 1932ம் ஆண்டு டிசம்பர் 15ந்தேதி பிறந்தவர் டி.என். சேஷன்.  திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்ற இயற்பெயரை கொண்ட அவர், சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பயின்றவர்.

அதன்பின்னர் கடந்த 1955ம் ஆண்டில் இந்திய ஆட்சி பணியில் தன்னை இணைத்து கொண்டார்.  தொடர்ந்து தமிழகம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு, அரசு பணிகளில் உயரிய பொறுப்பு என கூறப்படும் அமைச்சரவை செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார்.

இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த வருடம் காலமானார்.  இந்த தம்பதியின் வளர்ப்பு மகள் ஸ்ரீவித்யா மற்றும் அவரது கணவர் மகேஷ் ஆகியோரின் பராமரிப்பில் டி.என். சேஷன் வாழ்ந்து வந்துள்ளார்.  தெய்வ நாட்டம் அதிகம் கொண்ட அவர் காஞ்சி சங்கர மடத்தின் பக்தராவார்.

கடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.

Next Story