இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு, ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகம்; ஆய்வில் தகவல்


இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு, ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகம்; ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2019 8:36 AM GMT (Updated: 11 Nov 2019 8:36 AM GMT)

இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு மற்றும் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

புதுடெல்லி,

இந்தியாவில் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுபொருட்களை எரிப்பதால் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது.  வாகனங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்காக ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

டெல்லியில் காற்று தர குறியீடு 500க்கும் மேல் உள்ளது.  இது மித அளவை விட 5 மடங்கு அதிகம்.  பஞ்சாப், அரியானா மாநிலங்களில் காய்ந்த பயிர்களை எரிப்பதால் 40 சதவீதமும், டெல்லியில் கட்டுமான பணிகள், இடிக்கும் பணிகள் மற்றும் குப்பைகளை எரிப்பதால் 60 சதவீதமும் காற்று மாசு ஏற்படுகிறது என்று டெல்லி அரசு தரப்பில் கூறப்பட்டது.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து இருப்பது தொடர்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களை கொண்ட நாடான இந்தியாவில் காற்று மாசுபாட்டால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு பற்றி ஸ்பெயின் நாட்டில் உள்ள உலக சுகாதார பார்சிலோனா அமைப்பின் குழுவினர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஐதராபாத் மற்றும் தெலுங்கானாவின் புறநகர் பகுதிகளை ஒட்டிய இடங்களில் 3,372 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், ஸ்டிரோக் அல்லது இதய பாதிப்பு போன்ற கார்டியோவாஸ்குலார் வியாதிகள் ஏற்படும் ஆபத்து மக்களிடம் அதிக அளவில் உள்ளது தெரிய வந்தது.  ஏனெனில், காற்று மாசுபாட்டால், இதயத்தின் தமனிகள் தடிமன் அடைந்து விடும்.  இது சி.ஐ.எம்.டி. குறியீடு என அளவிடப்படுகிறது.

இந்த காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சி.ஐ.எம்.டி. குறியீடு அதிக அளவில் இருந்துள்ளது.

காற்றில் மாசுபாடு ஏற்படுத்தும் நுண்துகள்களின் அளவு பற்றிய உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள அதிகபட்ச அளவானது ஒரு கன சதுர மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் ஆகும்.  ஆனால் இந்தியாவில் ஆண்டு சராசரி அளவானது ஒரு கன சதுர மீட்டருக்கு 32.7 மைக்ரோ கிராம் என்ற அளவில் இந்தியாவில் உள்ளது.

இந்த ஆய்வு முடிவில் சி.ஐ.எம்.டி. குறியீடானது, கார்டியோமெட்டாபாலிக் ஆபத்து காரணிகளை கொண்ட அல்லது 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் அதிகம் உள்ளதும், மர கட்டைகள் போன்றவற்றை சமையல் எரிபொருளாக பயன்படுத்தும் பெண்களிடம் அதிகம் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதனால் உயர் ரத்த அழுத்தம், டையாபடீஸ் மற்றும் உடல்பருமன் போன்ற நோய் தாக்கங்கள் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து உள்ளது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

Next Story