மது போதையில் திருமண மேடையில் நாகினி நடனமாடிய புது மாப்பிள்ளை ; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்


மது போதையில் திருமண மேடையில் நாகினி நடனமாடிய புது மாப்பிள்ளை ; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
x
தினத்தந்தி 11 Nov 2019 11:04 AM GMT (Updated: 11 Nov 2019 12:01 PM GMT)

உத்தர பிரதேசத்தில் திருமணத்தில் மணமகன் செய்த விபரீத செயலால் மணமகள் மாலையை தூக்கி எறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.  மாப்பிள்ளை டிகிரி முடிக்கவில்லை, பாதியிலேயே கல்லூரியை விட்டு நின்று விட்டார். ஆனால், கல்யாண பெண் டிப்ளமோ வரை படித்திருக்கிறார். இவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. 

சொந்த பந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில் அனைவரின் ஆசியோடும், வாழ்த்துக்களோடும் மாப்பிள்ளை, மணமகளுக்கு தாலி கட்டினார். பிறகு புதுத்தாலி, மாலையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். அந்த நேரம் பார்த்து, மணமகனை அவரது நண்பர்கள், "நாகினி டான்ஸ் ஆடலாம்” என்று அழைத்தனர்.

நண்பர்கள் ஆசையுடன் கேட்கவும், மாப்பிள்ளை மறுப்பு தெரிவிக்காமல் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு உற்சாகமாக நாகினி நடனமாடினார்.  (அங்கெல்லாம் ஒரு நிகழ்ச்சி என்றால் நாகினி டான்ஸ் தான் ரொம்பவும் பிரபலம்) அப்போது திடீரென மாப்பிள்ளைக்கு போதை தலைக்கேறிவிட்டது. அதனால், டான்ஸ் ஆடியவர் திடீரென குப்புற கவிழ்ந்து கீழே விழுந்தார். நண்பர்கள் எல்லாம்  விழுந்து விழுந்து சிரித்தார்கள். பிறகு தட்டுத்தடுமாறி எழுந்து திரும்பவும் ஆட ஆரம்பித்தார். இதை கவனித்த கல்யாண பெண்ணுக்கு தர்மச்சங்கடமாகி விட்டது. மணமேடையில் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். 

"திருமணத்தில்  இப்படி மது அருந்தி  வரலாமா? என்று மாப்பிள்ளையை நேருக்கு நேராக கேட்டார்? அவர் ஏதோ உளற,  மணமகள் கோபத்தில் கழுத்தில் இருந்த மாலையை மணமகன் மீது கழட்டி வீசினார். எல்லோர் முன்னிலையிலும் மணப்பெண் இப்படி செய்தது மாப்பிள்ளைக்கு அவமானமாகிவிட்டது. உடனே, பளார் என்று கல்யாண பெண்ணை அறைந்து விட்டார். இதை பார்த்ததும் மணமகள் வீட்டினர், மணமகன் வீட்டினரை தாக்க முற்பட்டு அந்த கல்யாண வீடே கொஞ்ச நேரத்தில் போர்க்களமாகி விட்டது. 

உடனே தகவலறிந்து போலீசாரும் மண்டபத்திற்கு வந்து விட்டனர். இது குறித்து விசாரிக்க சென்றால் இந்த பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்து கொள்கிறோம் என்று இரு வீட்டாரும் போலீசாரிடம் சொல்லிவிட்டனர். யாரும் புகார் கொடுக்கவில்லை. பெண்ணுக்கு தரப்பட்ட எல்லா சீர்வரிசையையும் மாப்பிள்ளை வீட்டார் திருப்பி கொடுத்து விட்டனர். அவர்களும் அதை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். 

Next Story