அயோத்தியில் ராமர் கோவில்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் எல்லோரும் திருப்தி - கல்யாண் சிங் சொல்கிறார்


அயோத்தியில் ராமர் கோவில்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் எல்லோரும் திருப்தி - கல்யாண் சிங் சொல்கிறார்
x
தினத்தந்தி 11 Nov 2019 11:15 PM GMT (Updated: 11 Nov 2019 10:30 PM GMT)

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் அனைத்து பிரிவினருக்கும் திருப்தி ஏற்பட்டு உள்ளதாக உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் கூறியுள்ளார்.

லக்னோ,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டவும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வரவேற்பதாக ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னரும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான கல்யாண் சிங் கூறியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பின் போது உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்த இவர் லக்னோவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அயோத்தி தீர்ப்பு தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் எப்போதும் ராமபிரான் பக்தன். அயோத்தியில் பிரமாண்டமான கோவில் கட்ட வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே கனவு கண்டு வருகிறேன். அங்கு கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் கடைசியில் எனது கனவு நிறைவேறியுள்ளது. விரைவில் அயோத்தி சென்று வழிபாடு நடத்துவேன்.

500 ஆண்டுகளாக குழப்பத்தை ஏற்படுத்தி இருந்த ராமஜென்மபூமி பிரச்சினைக்கு இந்த தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது சட்டப்படி வழங்கப்பட்ட அங்கீகாரம் ஆகும். இந்த தீர்ப்பால் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் திருப்தி கிடைத்து உள்ளது.

அயோத்தி ராமஜென்ம பூமியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும். இந்த கோவிலை மிகவும் பிரமாண்ட முறையில் கட்டுமாறு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் உலகம் முழுவதும் உள்ள ராமபிரான் பக்தர்கள் அயோத்தி கோவிலில் வழிபாடு செய்ய ஆர்வமாக இருக்கின்றனர்.

ராமர் கோவில் விவகாரம் ஒருபோதும் அரசியல் பிரச்சினை கிடையாது. நாட்டு மக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கையுடன் இதை தொடர்புபடுத்தலாமே தவிர, அரசியலுடன் தொடர்புபடுத்தக்கூடாது. இவ்வாறு கல்யாண் சிங் கூறினார்.

இதற்கிடையே அயோத்தி வழக்கின் தீர்ப்பு ஆழமான குறைபாடு கொண்டதாக தேசிய சிறுபான்மையினர் கமிஷனின் முன்னாள் தலைவரும், நாட்டின் முதல் தலைமை தகவல் கமிஷனருமான வஜாகத் ஹபிபுல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த தீர்ப்பு ஆழமான குறைபாடு கொண்டதாக நான் கருதுகிறேன். இது ஆக்கப்பூர்வமான தீர்ப்பு என நான் சொல்லமாட்டேன். அதேநேரம் இது அழிவுகரமான தீர்ப்பும் அல்ல. இரு மிகப்பெரிய பிரிவினரின் கவலைகளை தீர்க்கும் வகையில் இந்த தீர்ப்பு எழுதப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் சட்டப்பூர்வ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறிய ஹபிபுல்லா, எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்றும், இதன் மூலம் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு 2-வது முறை ஆய்வு நடத்த வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினார்.


Next Story