மத்திய மந்திரிசபையில் இருந்து சிவசேனா மந்திரி ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றார் - பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு


மத்திய மந்திரிசபையில் இருந்து சிவசேனா மந்திரி ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றார் - பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 10:58 AM IST (Updated: 13 Nov 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

அரவிந்த் சாவந்த் மந்திரி பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

மத்திய மந்திரிசபையில் இருந்து சிவசேனா மந்திரி அரவிந்த் சாவந்த் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார். அவரது இலாகா, கூடுதல் பொறுப்பாக பிரகாஷ் ஜவடேகருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கும், சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், சிவசேனா ஆதரவு தர மறுத்து விட்டதால், பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

இதையடுத்து 2-வது பெரிய கட்சி என்ற வகையில், சிவசேனாவை ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷியாரி அழைத்தார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை சிவசேனா கோரியது. ஆனால் பாரதீய ஜனதா கூட்டணியை விட்டு சிவசேனா விலக வேண்டும்; மத்திய மந்திரிசபையில் இருந்து சிவசேனா மந்திரி அரவிந்த் சாவந்த் பதவி விலகினால்தான், சிவசேனாவுக்கு ஆதரவு தருவது பற்றி பரிசீலிக்க முடியும் என்று தேசியவாத காங்கிரஸ் கிடுக்கிப்பிடி போட்டது.

அதைத் தொடர்ந்து அரவிந்த் சாவந்த் பதவி விலக சிவசேனா கட்சி தலைமை உத்தரவிட்டது. அவரும் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஏற்றார். பிரதமர் ஆலோசனையின் பேரில் அரவிந்த் சாவந்த் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை செய்திக்குறிப்பு கூறுகிறது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை பேரில், அரவிந்த் சாவந்த் வகித்து வந்த கனரக தொழில் துறை மற்றும் பொதுநிறுவனங்கள் துறை கூடுதல் பொறுப்பாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிரகாஷ் ஜவடேகர், சுற்றுச்சூழல், வனத்துறை, தகவல்- ஒலிப்பரப்புத்துறை ஆகிய துறைகளுடன் கனரக தொழில் துறை மற்றும் பொது நிறுவனங்கள் துறையையும் சேர்த்து கவனிப்பார்.


Next Story