தேசிய செய்திகள்

யூடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு மக்களை மிரட்டிய இளைஞர்கள் 7 பேர் கைது + "||" + Seven students arrested in Bengaluru for 'ghost' prank videos

யூடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு மக்களை மிரட்டிய இளைஞர்கள் 7 பேர் கைது

யூடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு மக்களை மிரட்டிய இளைஞர்கள் 7 பேர் கைது
யூடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு மக்களை மிரட்டிய இளைஞர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களுரூ,

இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிக்டாக், யூடியூப் மோகம் அதிகரித்துள்ளதால்,  பின்விளைவுகளை அறியாமல் சில பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பின் வருந்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தற்போதெல்லாம், செய்திகளில் இதுபோன்ற நிகழ்வுகளை சர்வசாதாரணமாக காண முடிகிறது. அந்த வகையில் பெங்களுரூ நகர இளைஞர்கள், தங்கள் யூடியூப் சேனலுக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி போலீசிடம் வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. 

பார்வையாளர்களை கவர்வதற்காக பிராங் ஷோ போன்றவற்றை யூடியூப்பில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்ட இந்த இளைஞர்கள் சம்பவத்தன்று, பேய் வேடமிட்டு மக்களை அச்சுறுத்தி, அதை வீடியோவாக எடுத்து யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்ய முடிவெடுத்தனர். 

இதற்காக, நேற்று முன்தினம் இரவு பெங்களூரு யஷ்வந்த்புரம் அருகே ஷெரீப் நகர் பகுதியில் நள்ளிரவில் , வெள்ளை உடை அணிந்து, அதில் ரத்தக்கறை போல் மை வைத்துக் கொண்டார் அந்தக்குழுவில் உள்ள இளைஞர் ஒருவர்.  இரவில் தாமதமாக அந்த  வழியாக வந்த பொது மக்கள் முன்பு திடீரென்று தோன்றி பயமுறுத்தினார். பொதுமக்கள் பீதியில் ஓடினர். பேய் வேடமிட்டவரை ஒருவர் உருட்டுக் கட்டையால் துரத்தினார். அதை மறைவாக நின்று மற்றவர்கள் வீடியோ எடுத்தனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. 

இதனால்,  பீதி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்களில் சிலர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் இளைஞர்களை பிடித்தனர்.  யூடியூப்புக்காக இப்படி செய்கிறோம் என்று இளைஞர்கள் கூறினர். இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அங்குள்ள ஒரு கல்லூரியில் இளைஞர்கள் படிப்பதும் தெரியவந்தது.  முன் அனுமதியின்றி இந்த செயலில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் பெற்றோர்களை வரவழைத்த போலீசார், கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.