சிவசேனாவை முட்டாள் ஆக்க காங்கிரஸ் கூட்டணி முயற்சி; பா.ஜ.க.


சிவசேனாவை முட்டாள் ஆக்க காங்கிரஸ் கூட்டணி முயற்சி; பா.ஜ.க.
x
தினத்தந்தி 12 Nov 2019 4:18 PM GMT (Updated: 12 Nov 2019 4:18 PM GMT)

சிவசேனாவை முட்டாள் ஆக்க காங்கிரஸ் கூட்டணி முயற்சிக்கிறது என பா.ஜ.க. தெரிவித்து உள்ளது.

மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில், பா.ஜ.க. 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்தன. தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றன. ஆனால், முதல் மந்திரி பதவி வேண்டும் என்ற சிவசேனாவின் தொடர் பிடிவாதம் காரணமாக பா.ஜ.க.வால்  ஆட்சியமைக்க முடியவில்லை.

முதல் மந்திரி பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு 2½ ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இதையடுத்து பா.ஜ.க. ஆட்சியமைக்க விருப்பம் இல்லை என்று கூறி பின்வாங்கி விட்டது.  இதனால் சிவசேனா குழுவினர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க  கவர்னர் மறுத்து விட்டார்.

அடுத்து 3-வது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி இன்று இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டு கொண்டார்.

இதனால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.  இந்நிலையில், இரவு 8.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரங்களை வழங்குவது கடினம் என்று தேசியவாத காங்கிரஸ் மாநில  தலைவர் அஜித் பவார் கூறினார்.

இந்த நிலையில், சட்டப்பேரவை பதவி காலம் முடிந்து விட்டதால் மராட்டியத்தில் ஜனாதிபதி  ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை செய்து உள்ளார்.

இதை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதை தொடர்ந்து மராட்டியத்தில் ஜனாதிபதி  ஆட்சி அமலுக்கு வந்தது.

இதுபற்றி அக்கட்சியை சேர்ந்த நாராயண் ரானே கூறும்பொழுது, அரசு அமைக்க பா.ஜ.க. முயற்சி செய்யும்.  அந்த வகையில் தேவேந்திர பட்னாவிஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

சிவசேனாவை முட்டாள் ஆக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முயற்சி செய்து வருகிறது என நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உங்களுடன் தொடர்பில் உள்ளனரா? என்ற கேள்விக்கு, எதனை பற்றியும் என்னால் கூற முடியாது.  நான் கூற கூடிய ஒரே விசயம், அரசு அமைக்க உதவுவதற்கு என்னாலான முயற்சியை செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Next Story