மாணவர்கள் போராட்டம் எதிரொலி: டெல்லி பல்கலைக்கழகத்தில் விடுதிக்கட்டணம் குறைப்பு


மாணவர்கள் போராட்டம் எதிரொலி: டெல்லி பல்கலைக்கழகத்தில் விடுதிக்கட்டணம் குறைப்பு
x
தினத்தந்தி 14 Nov 2019 1:38 AM IST (Updated: 14 Nov 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக, டெல்லி பல்கலைக்கழகத்தில் விடுதிக்கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதைப்போல தண்ணீருக்கும், மின்சாரத்துக்கும் கட்டணம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தினர் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையொட்டி நடைபெற்ற போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று, உயர்த்தப்பட்ட கட்டணத்தில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை செயலாளர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உயர்மட்ட செயற்குழு, விடுதிக்கட்டண உயர்வில் பெருமளவை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது. எனவே, மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது’ என குறிப்பிட்டு உள்ளார்.

இருப்பினும் இந்த கட்டணக்குறைப்பை மாணவர் இயக்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. கட்டண உயர்வு முழுமையாக நீக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

Next Story