சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படாது - கடகம்பள்ளி சுரேந்திரன்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வர அரசு உதவி செய்யாது என்று மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளை சேர்ந்தோர் போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கும் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், ரோகின்டன் பாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகிய 3 நீதிபதிகள் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தீர்ப்பு வழங்கினார்கள்.
ரோகின்டன் பாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய இரு நீதிபதிகள், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லும் என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
அதே நேரத்தில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்ற முந்தைய உத்தரவு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்த சீசனில், வழிபாடு நடத்த அனுமதி கோரி இதுவரை 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புக்காக சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே சட்ட ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை அமல்படுத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசின் நிலைப்பாடு குறித்து பேட்டியளித்த தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “சபரிமலைக்கு பெண்களை அழைத்து வர அரசு எந்த முயற்சியும் எடுக்காது. ஊக்கப்படுத்தவும் செய்யாது. 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்கு வந்தால் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படாது. நீதிமன்ற உத்தரவுடன் வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிப்போம்”
”இருட்டின் மறைவிலும், போலீஸ் பாதுகாவலர்களுடனும் கடந்த ஆண்டு பெண் ஆர்வலர்கள் கோவிலுக்குள் நுழைந்து அய்யப்ப பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகி இருந்தனர். அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்போதும் சீரானது. அரசியலமைப்பு ரீதியாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டியது அரசின் கடமை”
கேரள போலீஸ் சட்டத்தின் பிரிவு 83ன் கீழ் சபரிமலை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை உயர் பாதுகாப்பு மண்டலங்களாக அரசு அறிவித்துள்ளது என்று கூறினார்.
தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு சபரிமலை கோவிலை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story