மராட்டியத்தில் கவர்னருடனான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் சந்திப்பு ஒத்திவைப்பு


மராட்டியத்தில் கவர்னருடனான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் சந்திப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 16 Nov 2019 4:49 PM IST (Updated: 16 Nov 2019 4:49 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் கவர்னருடனான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களின் சந்திப்பு ஒத்திவைக்கபட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால், ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கூட்டணியால் அரசை அமைக்க முடியவில்லை.  கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. கவர்னர் விதித்த கெடுவுக்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் கடந்த செவ்வாய்க்கிழமை மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. 

இந்துத்துவா கொள்கையை கடைபிடித்து வரும் சிவசேனா, மதசார்பற்ற கொள்கை கொண்ட காங்கிரசுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், மராட்டியத்தில் புதிய கூட்டணி உருவாவது உறுதியானது. ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோரும் முன்பு 3 கட்சிகளும் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளன. அதன்படி 40 அம்சங்கள் கொண்ட  குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

சிவசேனாவுக்கு 16 அமைச்சர்கள்,  தேசியவாத காங்கிரசுக்கு  14  அமைச்சர்கள்,  காங்கிரசுக்கு 12 என கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள்  இன்று மாலை கவர்னரை சந்திக்க முடிவு செய்து இருந்தனர். அதற்கான நேரமும் கேட்டு இருந்தனர். விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்  மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சார்பில்  கவர்னரிடம் நேரம் கேட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கவர்னருடனான  சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின்  தூதுக்குழு சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Next Story