பணம் கொடுத்து வெளிவரும் செய்திகளை விட போலி செய்திகள் பெரிய தீங்கு விளைவிப்பவை; மத்திய மந்திரி
பணம் கொடுத்து வெளிவரும் செய்திகளை விட போலி செய்திகள் பெரிய தீங்கு விளைவிப்பவை என மத்திய மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் தேசிய பத்திரிகையாளர் தினத்தினை கடைப்பிடிக்கும் வகையில் இந்திய பிரஸ் கவுன்சில் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பத்திரிகை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான தேசிய விருதுகளை வழங்கினார்.
இதன்பின் அவர் நிகழ்ச்சியில், கும்பலால் அடித்து கொல்லப்படும் சம்பவம் பற்றி பேசினார். அவர் பேசும்பொழுது, குழந்தை கடத்தப்பட்டது என்று போலியான செய்திகள் பரவின. இதனை தொடர்ந்து 20 பேர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டனர். கும்பல் தாக்குதலில் கொல்லப்படும் சம்பவம் பற்றி பேசும்பொழுது ஒருவர் பலியாவது பற்றியே பேசப்படுகிறது. ஆனால் போலி செய்தியால் 20 பேர் அடித்து கொல்லப்பட்டு உள்ளனர். அந்த விசயம் பேசப்படுவதே இல்லை என கூறினார்.
டுவிட்டரில் ஒரு தகவல் அழிக்கப்பட்டாலும் கூட, சில காலம்வரை அங்கேயே அந்த தகவல் இருக்கிறது என போலி செய்திகள், சமூக ஊடகத்தில் எப்படி வைரலாகிறது என்பது பற்றியும் அவர் பேசினார்.
பத்திரிகை சுதந்திரம் என்பது பொறுப்புள்ள சுதந்திரம் ஆக இருக்க வேண்டும். நமக்கு பொறுப்புள்ள சுதந்திரம் தேவையாக உள்ளது. ஊடக நபர்கள் உள்ளாய்வு செய்ய வேண்டியது தேவையாக உள்ளது. போலி செய்திகளுக்கு அதிக டி.ஆர்.பி. உள்ளது. பணம் கொடுத்து வெளிவரும் செய்திகளை விட போலி செய்திகள் பெரிய தீங்கு விளைவிப்பவை.
இதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி விவாதிக்க வேண்டும். அரசுக்கு அதற்காக நீங்கள் ஆலோசனைகளை வழங்கலாம் என்று அவர் கூறினார்.
ஆங்கிலேய ஆட்சி மற்றும் கடந்த 1975ம் ஆண்டில் நெருக்கடி காலங்களில் பத்திரிகை சுதந்திரம் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது என்பது பற்றியும் அவர் பேசினார்.
Related Tags :
Next Story