இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி: கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்து. பின் 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவும், அதிகளவில் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சேவும் முன்னிலை வகித்தனர். இதனால் வெற்றி வேட்பாளரை அறிவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13,60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு எனது வாழ்த்துக்கள். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி காட்டிய மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தியா இலங்கைக்கு இடையிலான கலாச்சார, வரலாற்று நாகரிக உறவுகள் மேலும் வலுப்பெறுவதற்கு இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story