நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டு உள்ளார்.
புதுடெல்லி,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்று எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் மேலும் 3 எம்.பி.க்கள் பதவி ஏற்று கொண்டனர்.
பிரதமர் மோடி கூறும்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்பு அவசியம் தேவை. அனைத்து விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளோடு ஆலோசனை நடத்த அரசு தயாராக உள்ளது என கூறினார்.
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவை வீட்டு காவலில் வைத்திருப்பது தொடர்பாக மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.
2 அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்களை தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நாடாளுமன்றத்திற்கு பாஜக எம்.பி. மனோஜ் திவாரி சைக்கிளில் வந்தார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், இன்று தொடங்கி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதன் நீண்ட கால கூட்டணி கட்சியான சிவசேனா விலகிய பின்னர் நடக்கிற முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இந்த கூட்டத்தொடர், பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நவம்பர் 26-ந் தேதி அரசியல் சாசன தினம் ஆகும். இதையொட்டி அன்றைய தினத்தில் பாராளுமன்ற கூட்டுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13-ந் தேதி முடிகிறது. இந்த கூட்டத்தொடரில் விவாதங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் பஞ்சம் இருக்காது.
Related Tags :
Next Story