ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த, மத்திய அரசு 2 ஆண்டுகள் கால அவகாசம்
இந்தியாவில், செல்போன் சேவையை வழங்கும் நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த, மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்திருக்கிறது.
புதுடெல்லி
செல்போன் நிறுவனங்களுக்கு, ஏஜிஆர் எனப்படும் சரிசெய்யப்படும் தோராய வருவாய் அடிப்படையில், லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் நிர்ணயம் செய்கிறது.
இந்த ஏஜிஆர் கணக்கீடு தொடர்பான வழக்கில், அண்மையில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் , ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள், 92 ஆயிரத்து 642 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதனால், திகைத்துப்போன ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள், மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தன. இதை பரிசீலித்த மத்திய அரசு, செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய, 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான ஸ்பெக்டரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளது.
இதற்கான ஒப்புதல், கேபினட் கூட்டத்தில் வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம், வோடபோன்-ஐடியா செலுத்த வேண்டிய 23,920 கோடி ரூபாய், ஏர்டெல் செலுத்த வேண்டிய 11,746 கோடி ரூபாய், ரிலையன்ஸ் ஜியோ செலுத்த வேண்டிய 6,670 கோடி ரூபாய் ஆகியவற்றை, உடனடியாக விடுவிப்பதில் இருந்து சற்று அவகாசம் கிடைத்திருக்கிறது.
விருப்பப்பட்டால், செல்போன் நிறுவனங்கள், தவணை முறையிலும், தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தவும், மத்திய அரசு வாய்ப்பளித்திருக்கிறது. இருப்பினும், அடுத்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது, தற்போதுள்ள அலைக்கற்றை நிலுவைத் தொகைக்கான வட்டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு கூறியிருக்கிறது.
Related Tags :
Next Story