பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி


பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி
x
தினத்தந்தி 1 Dec 2019 4:45 AM IST (Updated: 1 Dec 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதை கண்டித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு மாணவி தனி ஒருவராக போராடினார்.

புதுடெல்லி, 

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பிரியங்கா என்ற கால்நடை மருத்துவர், கற்பழித்து எரித்துக்கொல்லப்பட்டுள்ள கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களுக்கு எதிராக இப்படி குற்றச்செயல்கள் கட்டவிழ்த்து விடப்படுவது, சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எண்ண வைக்கிறது.

இப்படிப்பட்ட குற்றச்செயல்கள், டெல்லியை சேர்ந்த அனு துபே என்ற மாணவியை கொந்தளிக்க வைத்தது.

இதன் காரணமாக அவர் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே வாயில் எண் 2-3 அருகே நடைபாதையில் நேற்று அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவர், “ஏன் எனது சொந்த நாட்டில் நான் பாதுகாப்பை உணர முடியவில்லை?” என எழுதப்பட்ட அட்டையை ஏந்தி இருந்தார்.

அவரது போராட்டம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை ஜந்தர் மந்தருக்கு சென்று போராடுமாறு கூறினர். ஆனால் அவர் மறுத்து விட்டார். உடனே அவரை நாடாளுமன்ற வீதி போலீஸ் நிலையத்துக்கு வாகனத்தில் போலீசார் கூட்டிச்சென்றனர்.

அங்கு சில அதிகாரிகள் அவரது போராட்டம் குறித்து கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் அவரை விடுவித்தனர்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், “அரசு அதிகாரிகளை சந்தித்து பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து முறையிட விரும்பினேன்” என கூறினார்.

இதற்கு மத்தியில் மாணவி அனு துபே போலீசாரால் தாக்கப்பட்டதாக டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

“ஐதராபாத்தில் நடந்த துயர சம்பவத்தால் மன வேதனை அடைந்து குரல் கொடுத்த மாணவியை டெல்லி போலீசார் பிடித்துச்சென்று அடித்துள்ளனர். நான் அந்த மாணவியை போலீஸ் நிலையத்தில் சந்தித்தேன். அவர் பயந்து போய் உள்ளார். யார் தங்கள் குரலை எழுப்பினாலும், அவர்களுக்கு இந்த கதிதான் நேருமா?” என சுவாதி மாலிவால் கேள்வி எழுப்பினார்.

“இந்த வெட்கக்கேடான சம்பவத்தில் டெல்லி பெண்கள் ஆணையம், போலீசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கும். இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.

ஆனால் அனு துபே தாக்கப்படவில்லை என்று போலீஸ் மறுத்துள்ளது. 

Next Story