பேராயர்களின் பாலியல் துன்புறுத்தல்கள்; சுயசரிதை புத்தகத்தில் கேரள கன்னியாஸ்திரி தகவல்


பேராயர்களின் பாலியல் துன்புறுத்தல்கள்; சுயசரிதை புத்தகத்தில் கேரள கன்னியாஸ்திரி தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2019 1:55 PM IST (Updated: 3 Dec 2019 1:55 PM IST)
t-max-icont-min-icon

பேராயர்களின் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி கேரள கன்னியாஸ்திரி ஒருவர் 'கடவுளின் பெயரில்' என்ற சுயசரிதை புத்தகம் ஒன்றை வெளியிடுகிறார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் பிராங்கோ மூலக்கல், 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்களுக்கு மேலாகியும் விசாரணை முடிவடையாத நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக,  விடுதியில் அவருடன் தங்கியிருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்.

பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 5 கன்னியாஸ்திரிகளில் 4 பேரை கேரளாவில் உள்ள கான்வென்ட்டில் இருந்து வெளியேறும்படி அதன் தலைமை மிஷனெரி உத்தரவிட்டது.

இதனை அடுத்து 5வது கன்னியாஸ்திரியான நீனா ரோஸ் மற்றும் பிற கன்னியாஸ்திரிகள்,  முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினர்.  இதில் நீனா ரோஸ், என்னை தனிமைப்படுத்தி, துன்புறுத்துவது அவர்களின் நோக்கம். இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் எனது வாழ்க்கை ஆபத்தில் சிக்கி விடும் என எழுதினார்.

இந்த நிலையில், சமூகத்தின் ஒரு பகுதியாக மற்றும் அன்றாட மத வாழ்க்கையில் இணைந்து செயல்பட நீனா ரோஸ் மறுக்கிறார் என குற்றச்சாட்டு கூறி அவரை இடமாறுதல் செய்து மிஷனெரிகளுக்கான ஒருங்கிணைந்த தலைமை நிர்வாகம் உத்தரவிட்டது.

கடந்த வருடம் செப்டம்பரில் கேரளாவின் கொச்சி நகரில் வைத்து பேராயர் பிராங்கோ மூலக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டு  கோட்டயம் மாவட்டம் பலா கிளை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.  பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பேராயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கன்னியாஸ்திரி லூசி கலப்புரா என்பவர் 'கர்த்தாவின்டே நாமத்தில்' (கடவுளின் பெயரில்) என்ற சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், மத சாமியார்கள் மற்றும் பேராயர்கள் உள்ளிட்டோரின் பாலியல் வன்கொடுமைகள் பற்றி எழுதி உள்ளார்.

'ஒவ்வொருவரும் அறிந்த, ஆனால் அமைதி காத்து வரும் உண்மைகள் நிறைந்தவையானது' என இதுபற்றி கூறும் அவர், கடந்த 2000ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை எனக்கு கசப்புநிறைந்த அனுபவம் ஏற்பட்டது.

சபையில் இருந்து எனக்கு மனதளவிலான கொடுமைகள் நடந்தன. அவற்றை பற்றிய ஒரு பதிவை வைத்திருப்பது சிறந்தது என்று நினைத்தேன். அதனால் சிறுக, சிறுக அதனை பற்றி எழுத தொடங்கினேன்.

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவு அளித்த கிறிஸ்தவ ஆலய தலைவர்கள், அவர்களுக்கு எதிராக பேச தொடங்கி விட்டனர். குற்றவாளிக்கு ஆதரவுடன் செயல்படுகின்றனர்.  இது இயேசுவின் போதனைகளுக்கு எதிரானது. இது, எனக்கு வலியை ஏற்படுத்தியது.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி வெளியிடப்பட வேண்டும் என நான் நினைத்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story