தேசிய செய்திகள்

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் ஜூன் மாதம் முதல் அமல் - மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தகவல் + "||" + One Nation One Ration Card to be effective nationwide from June: Ram Vilas Paswan

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் ஜூன் மாதம் முதல் அமல் - மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் ஜூன் மாதம் முதல் அமல் - மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தகவல்
‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் ஜூன் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மக்களவையில் தெரிவித்தார்.
புதுடெல்லி,

மத்திய உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மக்களவையில் நேற்று இதுபற்றி கூறியதாவது:-

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி தகுதியுள்ள பயனாளிகள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் அதே ரேஷன் கார்டு மூலம் வாங்க முடியும். இதனால் இடம்பெயரும் தொழிலாளர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள் அதிக பலன் அடைவார்கள்.


ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள மின்னணு கையடக்க விற்பனை கருவிகளில் (பி.ஓ.எஸ்.) இணைத்த பின்னரே இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

எனவே இதற்கு வசதியாக மாநிலங்களில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் கையடக்க விற்பனை கருவிகள் வழங்கப்படுவதுடன், அந்த கடை முழுமையாக மின்னணு மயமாக்கப்பட வேண்டும். இந்த திட்டம் நாடு முழுவதும் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

தங்கள் வேலை மற்றும் இதர காரணங்களுக்காக நாடு முழுவதும் அடிக்கடி இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு இது பயனளிக்கும். குறிப்பாக கட்டுமானம், எண்ணெய் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவைகளில் அதிகளவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதுதவிர ‘ஒரே நாடு, ஒரே தரம்’ என்ற திட்டத்தையும் கொண்டுவரும் முனைப்பில் அரசு ஈடுபட்டு வருகிறது. நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் இதனை நிறைவேற்றுவதற்கான ஒரு திட்டத்தை தயாரிக்கும்படி இந்திய தர அமைப்பை (பி.ஐ.எஸ்.) கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வாய்ப்புள்ள தயாரிப்புகளில் இந்திய தரம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும். இந்திய தர அமைப்பு 20 ஆயிரம் பொருட்களுக்கு இந்திய தரத்தை முறைப்படுத்தி உள்ளது. அதோடு 51 நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பல்வேறு தயாரிப்புகள் இந்திய தரத்துக்கு இருப்பதாக அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.