வைபை வழியாக மக்களுக்கு இலவசமாக இணையதள வசதி : அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு


வைபை வழியாக மக்களுக்கு இலவசமாக இணையதள வசதி : அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2019 2:01 PM IST (Updated: 4 Dec 2019 2:01 PM IST)
t-max-icont-min-icon

வைபை வழியாக மக்களுக்கு இலவசமாக இணையதள வசதி வழங்கப்படும் என டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு இலவசத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார்.

சமீபத்தில் டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில் மேலும் ஒரு இலவச திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அப்போது வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி டெல்லி மக்களுக்கு மாதந்தோறும் 15 ஜிபி டேட்டா இணையதள வசதி இலவசமாக வழங்கப்படும்.

இதற்காக டெல்லி முழுவதும் 11 ஆயிரம் ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும். பேருந்து நிலையங்களில் 4000 ஹாட்ஸ்பாட்டுகளும், சந்தை பகுதிகளில் 7000 ஹாட்ஸ்பாட்களும் அமைக்கப்படும். 

வரும் 16-ம் தேதி முதல்கட்டமாக 100 ஹாட்ஸ்பாட்டுகள் தொடங்கி வைக்கப்படும். இதன் மூலம் வைபை வழியாக மக்களுக்கு இலவசமாக இணையதள வசதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story