பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க பட்னாவிஸ்-அஜித்பவார் பேசி வந்தது எனக்கு தெரியும் - சரத்பவார் சொல்கிறார்


பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க பட்னாவிஸ்-அஜித்பவார் பேசி வந்தது எனக்கு தெரியும் - சரத்பவார் சொல்கிறார்
x
தினத்தந்தி 5 Dec 2019 3:27 AM IST (Updated: 5 Dec 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து பட்னாவிஸ்-அஜித்பவார் பேசி வந்தது எனக்கு தெரியும் என சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்த நேரத்தில் ரகசியமாக காய் நகர்த்திய பாரதீய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகனும், அந்த கட்சியின் முக்கிய தலைவருமான அஜித்பவாரை ரகசிய பேச்சுவார்த்தை மூலம் தன் பக்கம் இழுத்து கடந்த மாதம் 23-ந் தேதி திடீரென ஆட்சி அமைத்தது. போதிய ஆதரவு இல்லாததால் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி 4 நாளில் முடிந்துபோனது.

இதற்கிடையே பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு சரத்பவார் தான் அஜித்பவாரை பின்னால் இருந்து இயக்கியதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால் அதை சரத்பவார் திட்டவட்டமாக மறுத்தார். தற்போது மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது. அஜித்பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில், பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைவதற்காக தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் தொடர்பில் இருந்தது தனக்கு தெரியும் என சரத்பவார் தற்போது மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘மராட்டியத்தில் பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைவதற்காக தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது எனக்கு தெரியும். ஆனால் அஜித்பவார் அப்போது எடுத்த அரசியல் முடிவு எனக்கு தெரியும் என்ற யூகம் தவறானது‘ என்றார்.


Next Story