பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறாக பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறாக பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x

நாட்டில் நிலவும் பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறாக பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.

புதுடெல்லி

முன்னாள் மத்திய நிதி  அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்று இரவு 8 மணியளவில் நான் சிறையில் இருந்து  வெளியேறி சுதந்திரக் காற்றை சுவாசித்தபோது, எனது முதல் எண்ணமும் பிரார்த்தனையும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 75 லட்சம் மக்களுக்காக இருந்தது.  2019 ஆகஸ்ட் 4 முதல் அவர்களுக்கு அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் குறித்து நான்  கவலைப்படுகிறேன். சுதந்திரம் பிரிக்க முடியாதது, நமது சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், அவர்களின் சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டும்.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி  ஆகிய மோசமான முடிவுகளால்  நாட்டின் பொருளாதாரம் பாதித்துள்ளது . பிரதமர், பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறாக மவுனம் காத்து வருகிறார். அவர் அதை தனது அமைச்சர்களிடம் விட்டுவிட்டார். பொருளாதார நிபுணர் கூறியது போல், அரசாங்கம் பொருளாதாரத்தின் ‘திறமையற்ற மேலாளராக’ மாறிவிட்டது.

பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள இந்த அரசால் முடியாது, நிதியமைச்சரின் பேச்சு இந்த அரசின் மன நிலையை வெளிப்படுத்துகிறது.

வளர்ச்சி 5 சதவீதத்தை தொட்டால்  இந்த ஆண்டை முடித்த நாம் அதிர்ஷ்டசாலிகள். டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியனின் எச்சரிக்கையை நினைவில் கொள்ளுங்கள், இந்த அரசாங்கத்தின் கீழ்  வளர்ச்சி உண்மையில் 5 சதவீதம் அல்ல, சுமார் 1. 5 சதவீதம்  தான் உள்ளது.

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி அழுத்தம் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் 8ல் இருந்து 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. பாஜக அரசு பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத அரசாக உள்ளது .

பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது

நிதி அமைச்சராக எனது செயல்களில் எந்தக் குற்றமும் இல்லை, வழி தெரியாததால் அரசு தவறான நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சராக எனது பதிவும் எனது மனசாட்சியும் முற்றிலும் தெளிவாக உள்ளன. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், என்னுடன் உரையாடிய வணிக நபர்கள் மற்றும் என்னைக் கவனித்த பத்திரிகையாளர்கள் அதை நன்கு அறிவார்கள் என்று கூறினார்.

Next Story