நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, எனக்கு எப்படி அதன் விலை பற்றி தெரியும் ; மத்திய மந்திரி கருத்தால் சர்ச்சை


நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, எனக்கு எப்படி அதன் விலை  பற்றி தெரியும் ; மத்திய மந்திரி கருத்தால் சர்ச்சை
x
தினத்தந்தி 5 Dec 2019 1:00 PM GMT (Updated: 5 Dec 2019 1:00 PM GMT)

நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, எனக்கு எப்படி அதன் விலை பற்றி தெரியும் என்று மத்திய மந்திரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. வெங்காயத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய மந்திரி அஸ்வினி சோபேவிடம் செய்தியாளர்கள் வெங்காய விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த அவர், “ நான் சைவ உணவு சாப்பிடுபவன். வெங்காயத்தை நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை. என்னைப்போன்ற நபர்களுக்கு வெங்காயத்தின் விலை நிலவரம் பற்றி எப்படி தெரியும்” என்றார். வெங்காயத்தின் விலையே மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் நிலையில், மத்திய மந்திரியின் பொறுப்பற்ற பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, இன்று நாடாளுமன்ற மக்களவையில், நாங்கள் வெங்காயம் உண்பதில்லை அதனால் வெங்காய விலை உயர்வு தன்னையோ தன்  குடும்பத்தினரையோ பாதிக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சர்ச்சையை கிளப்பியது. இது பற்றி அஷ்வினி  சோபேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நிர்மலா சீதாராமன் அப்படி ஒரு கருத்தையே கூறவில்லை. வெங்காய விலை பற்றி உறுப்பினர்கள் கேட்டபோது, மக்கள் நலனுக்காக அரசு இவ்விவகாரத்தில் எடுத்து வரும் நடவடிக்கை பற்றியே விளக்கினார்” என்றார்.

சர்ச்சைக்குரிய வகையில், கருத்து தெரிவிப்பது அஷ்வினி சோபேவுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கடந்த மாதம், பீகார் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை எனக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை  ஏற்படுத்தியிருந்தது.

Next Story