தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு


தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 5:45 AM IST (Updated: 6 Dec 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது. எனவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? என்பது இன்று தெரியும்.

புதுடெல்லி, 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து 2016-ம் ஆண்டு அக்டோபர் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதி அறிவித்தது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடந்த 2-ந் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவும், இதே கோரிக்கையுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உமாபதி உள்ளிட்ட 6 பேர் தாக்கல் செய்த மனுவும், வக்கீல் சி.எஸ்.ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்த மனுவும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, அமித் ஆனந்த் திவாரி, பி.வில்சன் ஆகியோர் ஆஜரானார் கள். மற்ற மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், வக்கீல் எம்.பி.பார்த்திபன் ஆகியோர் ஆஜரானார்கள்.

தமிழக அரசு, கவர்னரின் செயலாளர் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, அரிமா சுந்தரம், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், பாலாஜி சீனிவாசன், வினோத் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.

தி.மு.க. தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படிதான் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் அறிவிப்பதில் உள்ள அனைத்து சட்ட சிக்கல்களையும் நீக்கி விட்டுத்தான் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளதை மறந்து விட்டார்கள்.

தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை பணிகள் எதுவும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இடஒதுக்கீடு பணிகளை எந்த அளவிற்கு முடித்து இருக்கிறார்கள் என்பதற்கும் பதில் இல்லை.

தற்போது 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்த மாவட்டங்களில் எந்த அடிப்படையில் தேர்தல் நடத்துவார்கள் என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், தொகுதி மறுவரையறை பணிகள், தொகுதிகளுக்கான இட ஒதுக்கீடு என எல்லா பணிகளும் முற்றாக நிறைவு அடைந்துள்ளன என்றும், வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வருவது மட்டும்தான் மீதம் உள்ள வேலை என்றும் கூறினார்.

உடனே நீதிபதிகள் குறுக் கிட்டு, “புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளதா?” என்று கேட்டனர்.

அதற்கு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் பதில் அளிக்கையில், “அதை செய்ய வேண்டியது இல்லை. தொகுதி மறுவரையறை பணிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்ய வேண்டியதாகும். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தொகுதி மறுவரையறை பணிகள் செய்யப்படும்” என்றார்.

உடனே நீதிபதிகள் குறுக் கிட்டு, “தொகுதி மறுவரையறை என்பது எதற்காக செய்யப்படுகிறது? குழப்பம் ஏதுமில்லாமல் சரியான இடஒதுக்கீடு முறைகளை பின்பற்றத்தானே? புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகள் செய்யவில்லை என்றால் குழப்பம் ஏற்படாதா?” என்றனர்.

அதற்கு தி.மு.க. தரப்பு வக்கீல்கள் கூறுகையில், “பல ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட தொகுதி மறுவரையறை பணிகளை தற்போது செய்தது என கூறி தங்கள் பணிகளை முடித்துவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பல பிரிவுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானவை. காரணம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு, பெண்களுக்கான ஒதுக்கீடு என பல ஒதுக்கீடுகள் உள்ளன. எனவே புதிய மாவட்டமாக பிரிக்கும்போது இதில் பல விஷயங்கள் அடிபட்டு போகும். இதனால்தான் இதை குளறுபடியான அறிவிப்பு என கூறுகிறோம்” என்றனர்.

மாரியப்பன் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் வாதாடுகையில், தேர்தல் நடந்து நல்ல அரசு அமைய வேண்டும் என்பதுதான் தங்கள் விருப்பம் என்றும், ஆனால் அது நியாயமாகவும், நேர்மையான முறையிலும் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:-

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள்:- டிசம்பர் 2-ந் தேதி வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் 31 மாவட்டங்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிதான் தொகுதி மறுவரையறை பணிகள் நடந்தது. இனி புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டில்தான் வெளிவரும். அப்போதுதான் மீண்டும் தொகுதி மறுவரையறை செய்ய முடியும்.

நீதிபதிகள்:- எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன? அப்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பழைய நிலையே தொடரும் என்றால், அதை எப்படி புரிந்து கொள்வது? புதிய மாவட்டங்கள் உருவாக்க எப்போது முடிவு செய்யப்பட்டது?

தமிழக அரசு வக்கீல்:- புதிய மாவட்டங்கள் உருவாக்கம் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

நீதிபதிகள்:- சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நாம் நடக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் ஏன் தேர்தல் நடத்தாமல் இருந்தீர்கள்? புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பழைய முறைப்படி பஞ்சாயத்து அமைப்புகள் இருக்குமா? அல்லது புதிய மாவட்டங்களின் கீழ் செயல்படக்கூடிய பஞ்சாயத்து அமைப்புகள் இருக்குமா? நாடாளுமன்றம் என்ன விதிகளை வகுத்துள்ளதோ அதன்படி தேர்தல் நடைபெற வேண்டும். அதை தவிர்த்து குறுக்கு வழியில் தேர்தல் நடத்தப்படக்கூடாது.

மேலும் ஒரு மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்கும்போது அனைத்து எல்லையும் மாறும். அப்படி இருக்கையில் ஏற்கனவே தொகுதி மறுவரையறை செய்து முடித்துவிட்டோம் என்று எப்படி கூற முடியும்? தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளிப் போட முடியும்.

தமிழக மாநில தேர்தல் ஆணைய வக்கீல்:- தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின், எந்த கோர்ட்டாலும் தேர்தலை தள்ளிப்போட முடியாது.

நீதிபதிகள்:- தேர்தலை ரத்து செய்யமுடியாது. ஆனால் முறையான விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றால் அதை எங்களால் நிறுத்தி வைக்க முடியும்.

தமிழக அரசு வக்கீல்:- 9 மாவட்டங்களில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யவில்லை என நீங்கள் நினைத்தால், அந்த மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை ஒத்திவையுங்கள். மொத்தமாக தேர்தலை நிறுத்தாதீர்கள்.

தி.மு.க. தரப்பு வக்கீல்:- தடைவிதித்தால் மொத்தமாக தடைவிதியுங்கள். இல்லை என்றால் குழப்பம் ஏற்படும்.

தமிழக அரசு வக்கீல்:- மறுவரையறை தொடர்பாக கோர்ட்டு தெரிவித்தது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசின் கருத்தை கோர்ட்டில் தெரிவிக்க அவகாசம் வேண்டும்.

நீதிபதிகள்:- புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகள் முடித்த பிறகு தேர்தலை நடத்துவது பற்றி பிற்பகல் 2 மணிக்கு தமிழக தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

அதன்படி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கோர்ட்டு விசாரணை தொடங்கிய போது தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவு எட்டப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்படும்.

மேற்கண்ட 9 மாவட்டங்களில் புதிதாக தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவை நிறைவடைந்த பிறகு அந்த மாவட்டங்களில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்படும்.

இந்த 9 மாவட்டங்களை தவிர தமிழ்நாடு முழுவதும் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்துவது குறித்த புதிய அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள் இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து தி.மு.க. தரப்பிலும், மனுதாரர் சி.எஸ்.ஜெயசுகின் தரப்பிலும் ஆஜரான வக்கீல்கள் கோரிக்கை ஒன்றை விடுத்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி, மற்றும் 9 மாவட்டங்களிலும் தேர்தலை பின்னர் நடத்துவதால், இப்போது உள்ளாட்சி தேர்தல் என்பது வெறும் 10 சதவீதத்துக்குத்தான் நடைபெறும். இதன்முடிவு, பின்னர் 90 சதவீத பகுதிகளில் நடைபெறும் தேர்தல் முடிவை பாதிக் கும். எனவே தற்போது நடைபெறும் தேர்தலின் முடிவை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து விட்டதாக கூறி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில் நேற்று மாலை தகவல் வெளியிடப்பட்டது.

எனவே தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறுமா? அல்லது தொகுதி மறுவரையறை பிரச்சினை காரணமாக 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா? என்பது இன்று தெரியும்.

Next Story