மேற்கு வங்காள சட்டசபையில் கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சி மாநில அரசுக்கு கண்டனம்


மேற்கு வங்காள சட்டசபையில் கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சி மாநில அரசுக்கு கண்டனம்
x
தினத்தந்தி 6 Dec 2019 3:00 AM IST (Updated: 6 Dec 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் கவர்னர் ஜெக்தீப் தங்கருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் கவர்னர் ஜெக்தீப் தங்கருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் சட்டசபை அலுவலகத்துக்கு நேற்று வர இருப்பதாக சபாநாயகருக்கு கவர்னர் தகவல் கொடுத்திருந்தார். அதன்படி காலையில் சட்டசபைக்கு அவர் சென்றார்.

ஆனால் சட்டசபையில் கவர்னருக்கான பிரத்யேக நுழைவாயிலான 3-ம் எண் ‘கேட்’ பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெக்தீப் தங்கர், பத்திரிகையாளர்கள் செல்லும் 2-ம் எண் ‘கேட்’ வழியாக சட்டசபை அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் சட்டசபை நூலகத்துக்கும் சென்றுவிட்டு கவர்னர் மாளிகை திரும்பினார்.

சட்டசபையில் தான் செல்லக்கூடிய நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தது தொடர்பாக மாநில அரசுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் முன்னெப்போதும் இல்லாதது எனவும், இதன் மூலம் ஜனநாயகம் அவமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறிய அவர், இந்த நடவடிக்கையால் தன்னை மட்டுமின்றி, மாநில மக்களையும், அரசியல் சாசனத்தையும் அவமானத்துக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் ஆவேசமாக கூறியுள்ளார்.

அரசின் மசோதாக்கள் மீது கவர்னர் முடிவு எடுக்க தாமதிப்பதாக குற்றம் சாட்டி சட்டசபை 2 நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story