உன்னாவ்: 11 மாதங்களில் 86 கற்பழிப்புகள்; அரசியலாக்க கூடாது என நீதி மந்திரி பேட்டி


உன்னாவ்: 11 மாதங்களில் 86 கற்பழிப்புகள்; அரசியலாக்க கூடாது என நீதி மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2019 11:52 AM IST (Updated: 7 Dec 2019 11:52 AM IST)
t-max-icont-min-icon

கற்பழிப்பு வழக்குகளை அரசியலாக்க கூடாது என்று உத்தர பிரதேச நீதி மந்திரி கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தி செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த குற்ற செயலில் ஈடுபட்ட சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி ஆகிய 2 பேர் மீது கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  வழக்கு விசாரணைக்காக, நேற்று காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு புறப்பட்டார்.

அவர் கோர்ட்டுக்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் வழிமறித்து, அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர்.  90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அப்பெண், மேல் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த பெண் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணுக்கு நேற்று இரவு 11.10 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதை சரி செய்ய தீவிரமாக முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும், இதனால் அவர் நேற்று இரவு 11.40 மணியளவில் உயிரிழந்தார் என்றும் மருத்துவமனையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய உத்தர பிரதேச நீதி மந்திரி பிரஜேஷ் பதக், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நம்மிடம் இல்லை என்பது வருத்தம் தருகிறது.  இந்த வழக்கை விரைவு விசாரணை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்படி இன்றே நாங்கள் அதற்கான நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.

தினந்தோறும் என்ற அடிப்படையில் இந்த வழக்கை விசாரணை மேற்கொள்ளவும் கோரிக்கை வைப்போம் என கூறினார்.

உன்னாவ் நகரில் கடந்த 11 மாதங்களில் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுபற்றி பிரஜேஷ் பதக் கூறும்பொழுது, கற்பழிப்பு வழக்குகளை அரசியலாக்க கூடாது.  குற்றவாளிகள் எந்தளவிற்கு சக்தி வாய்ந்தவர்கள் என்றாலும் அவர்களை நாங்கள் விடப்போவதில்லை.  கடுமையான நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.

இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள முதல் மந்திரி ஆதித்யநாத், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.  இந்த வழக்கு விரைவு விசாரணை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படும் என கூறினார்.

Next Story